யவத்மாலில் பயங்கரம் பாலத்தில் இருந்து கார் பள்ளத்தில் பாய்ந்து 7 பேர் பலி துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது துயரம்
யவத்மாலில் பாலத்தில் இருந்து கார் பள்ளத்தில் பாய்ந்து 7 பேர் பலியானார்கள். 12 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது இந்த துயர விபத்து ஏற்பட்டது.
மும்பை,
வார்தா மாவட்டம் கோட்டேஸ்வர் பகுதியில் நேற்றுமுன்தினம் கார் ஒன்று யவத்மால் மாவட்டம் ஜோட்மோகா நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த கார் யவத்மாலில் உள்ள கலாம்ப்- ஜோட்மோகா சாலையில் உள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. இதில் துரதிருஷ்டவசமாக அந்த கார் பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு கீழே உள்ள பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் கார் உருக்குலைந்து போனது.
7 பேர் பலி
இடிபாடுகளில் சிக்கி டிரைவர் அமர் ஆத்ராம்(வயது29), மகாதேவ் சந்தன்கர்(54), கிருஷ்ணா பிரசன்கர்(55), அஞ்சனா வான்கடே(69), பாபாராவ் வான்கடே, சம்பாஜி மேஸ்ராம்(65) உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 12 பேர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
போலீஸ் விசாரணையில், விபத்தில் சிக்கியவர்கள் ஜோட்மோகா மற்றும் அகோலா பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் வார்தாவில் ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு திரும்பி கொண்டிருந்த போது இந்த துயர விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.