சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக தீர்மானம் கர்நாடக பா.ஜனதா அரசு முடிவு

சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்ற கர்நாடக பா.ஜனதா அரசு முடிவு செய்துள்ளது.;

Update: 2020-02-17 23:28 GMT
பெங்களூரு, 

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் வந்து தஞ்சம் அடைந்துள்ள இந்து, சீக்கிய, புத்த, ஜெயின், பார்சி மற்றும் கிறிஸ்துவ மதங்களை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை இயற்றியுள்ளது.

அந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து அந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து முஸ்லிம் அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. கர்நாடகம், உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் வன்முறை வெடித்து, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உண்டானது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் கர்நாடக மாநிலம் மங்களூருவில் 2 பேர் உயிரிழந்தனர்.

ஆதரவாக தீர்மானம்

இதற்கிடையே எக்காரணம் கொண்டும் இந்த சட்டத்தை வாபஸ் பெற மாட்டோம் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த சட்டத்திற்கு எதிராக கேரளா உள்பட சில மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. அதே போல் குஜராத் உள்பட பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் அந்த சட்டத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

இந்த நிலையில் கர்நாடக பா.ஜனதா அரசு, சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 2-ந் தேதி தொடங்குறது. அன்றைய தினம் இந்த ஆதரவு தீர்மானம் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மீது 2 நாட்கள் விவாதம் நடைபெற்ற பிறகு, அது அங்கீகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்