மும்பையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து சங்கிலி பறித்த வாலிபர் கைது

மும்பையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து சங்கிலி பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-02-17 23:00 GMT
திரு.வி.க. நகர், 

சென்னை திருமங்கலம், அண்ணாநகர், அரும்பாக்கம், கீழ்ப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக அதிகளவில் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெறுவதாக பொதுமக்களிடம் இருந்து போலீசாருக்கு புகார்கள் வந்தன. இந்த சங்கிலி பறிப்பில் ஒரே நபர்தான் ஈடுபடுவதாகவும் போலீசார் சந்தேகித்தனர்.

துணை கமிஷனர் முத்துசாமியின் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் சிவகுமார் தலைமையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வேல்முருகன் உள்ளிட்ட போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள், சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெற்ற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தீவிரமாக ஆராய்ந்தனர்.

மராட்டிய வாலிபர் கைது

அப்போது ஆந்திர மாநில பதிவு எண்கொண்ட மோட்டார் சைக்கிளில் கொள்ளையன் சுற்றித்திரியும் வீடியோ கிடைத்தது. அதில் கொள்ளையன் வெளிமாநில நபர்போல் தோற்றம் அளித்ததால் பீகார், மராட்டியம், கேரளா, ஆந்திரா ஆகிய மாநில போலீசாரிடம் அந்த புகைப்படங்களை காண்பித்து விசாரணை நடத்தினர்.

அதில் சென்னையில் தொடர்ந்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது, மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த அமோல் பாலசாஹிப் ஷிண்டே (வயது 29) என்பது தெரியவந்தது.

இதற்கிடையில் அண்ணாநகர்-திருமங்கலம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போலீசார், அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையன் அமோல் பாலசாஹிப் ஷிண்டேவை மடக்கிப்பிடித்து கைது செய்து விசாரித்தனர்.

கைதி ஆலோசனை

அதில் அவர், ஆந்திர மாநிலத்தில் இதுபோல் கைவரிசை காட்டியபோது, அந்த மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது சென்னை அண்ணாநகர் பகுதியில் வசதி படைத்தவர்கள் அதிகளவில் வசிப்பதால் அங்கு சென்றால் ஏராளமான நகை, பணம் கொள்ளையடிக்கலாம் என சக கைதி ஒருவர் அவருக்கு ஆலோசனை கூறினார்.

அதன்பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த அவர், ஆந்திராவில் இருந்து திருட்டு மோட்டார் சைக்கிளில் சென்னை வந்து வெவ்வேறு விடுதிகளில் மாறி மாறி தங்கி திருமங்கலம், அண்ணாநகர், அரும்பாக்கம், கீழ்ப்பாக்கம் ஆகிய பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.

விமானத்தில் வந்தார்

இவ்வாறு பறித்த சங்கிலிகளை விற்று அதில் கிடைத்த பணத்தில் விமானம் மூலம் மராட்டிய மாநிலத்துக்கு சென்று அங்கு உல்லாசமாக இருந்ததும், பணம் குறைந்ததும் மீண்டும் விமானம் மூலம் சென்னை வந்து கைவரிசை காட்டியதும் தெரிந்தது.

அவரிடம் இருந்து 20 பவுன் நகை மற்றும் ஆந்திர மாநில பதிவு எண்கொண்ட ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்