காவேரிப்பட்டணம் அருகே காய்ச்சலுக்கு ஊசி போட்டதில் தொழிலாளி பரிதாப சாவு போலி டாக்டர் கைது

காவேரிப்பட்டணம் அருகே காய்ச்சலுக்கு ஊசி போட்டதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2020-02-17 23:15 GMT
காவேரிப்பட்டணம்,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள பாரதிபுரம் பட்டாலப்பள்ளியை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் ராமன் (வயது 46). 12-ம் வகுப்பு படித்துள்ள இவர் காவேரிப்பட்டணம் அருகே உள்ள மோரனஅள்ளியில் கடந்த 2 ஆண்டுகளாக வாடகைக்கு அறை எடுத்து தங்கி அங்குள்ள மக்களுக்கு மருத்துவம் பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த முனியம்மாள் தனது கணவரான கூலித்தொழிலாளி ஜெயவேல் (40) என்பவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக கூறி ராமனிடம் அழைத்து வந்தார். அங்கு ராமன், ஜெயவேலுக்கு கையில் உள்ள நரம்பில் ஊசி போட்டுள்ளார். ஆனால் ஊசி போட்ட சிறிது நேரத்தில் ஜெயவேல் மயக்கம் போட்டு விழுந்தார்.

இதைப் பார்த்து பதறி போன முனியம்மாள், ஜெயவேலை காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கார் மூலம் கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜெயவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் காவேரிப்பட்டணம் போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் இறந்து போன ஜெயவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து முனியம்மாள் அளித்த புகாரின் பேரில் போலி டாக்டர் ராமனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காய்ச்சலுக்கு போலி டாக்டர் ஊசி போட்டதில் தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்