வாசுதேவநல்லூர் அருகே ஆம்னி பஸ் மோதி 3 பேர் பலி: டயர் வெடித்து பழுதான காரின் அருகே நின்றபோது பரிதாபம்
வாசுதேவநல்லூர் அருகே டயர் வெடித்து பழுதான காரின் அருகே நின்றபோது ஆம்னி பஸ் மோதியதில் டிரைவர் உள்பட 3 பேர் பலியானார்கள்.;
வாசுதேவநல்லூர்,
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் மானூர் தாலுகா மங்குழிபானாவை சேர்ந்த நைனான் மகன் சின்ஜோ (வயது 38). இவரிடம் விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஆனையூரை சேர்ந்த தங்கவேல்சாமி மகன் ராஜசேகர் (46) கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
சின்ஜோவின் உறவினர் கல்வதுக்கல் என்ற ஊரைச் சேர்ந்த தாமஸ் குட்டி மகன் சிஜூ தாமஸ் (30). இவர்கள் 2 பேரும் மற்றும் இவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்களும் என மொத்தம் 6 பேர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காரில் வேளாங்கண்ணிக்கு சென்றனர். அந்த காரை ராஜசேகர் ஓட்டினார். கோவிலுக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் அதே காரில் ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே அருளாச்சி விலக்கு வடபுறம் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் வந்தபோது, காரின் முன்பக்கம் வலதுபுற டயர் திடீரென வெடித்தது. இதனால் காரை சாலையோரத்தில் ராஜசேகர் நிறுத்தினார். அப்போது அங்கு ரோந்து பணிக்கு வந்த வாசுதேவநல்லூர் போலீசாரிடம் ராஜசேகர் விவரத்தை எடுத்து கூறினார்.போலீசாரின் அறிவுரையின்படி காரில் இருந்த 4 பெண்களை சின்ஜோ பஸ்சில் ஏற்றி ஊருக்கு அனுப்பி வைத்தார். மேலும் பழுதடைந்த காரை ஒர்க்ஷாப்புக்கு இழுத்துச் சென்று சரிசெய்வதற்காக நேற்று அதிகாலை 4.30 மணிக்கு மீட்பு வாகனத்தில் 2 பேர் வந்தனர். அவர்களிடம் சின்ஜோ, சிஜூதாமஸ், ராஜசேகர் ஆகிய 3 பேரும் ரோட்டின் மேல்புறம் காரின் அருகே நின்று கொண்டு வாடகை பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக கோவையில் இருந்து தென்காசி நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பஸ், அவர்களின் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் 3 பேரை சில அடி தூரம் வரை இழுத்துச் சென்றது. இதில் சின்ஜோ, சிஜூதாமஸ், ராஜசேகர் ஆகிய 3 பேரும் பஸ் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்கள்.
மேலும் மீட்பு வாகனத்தில் வந்திருந்த மேல கடையநல்லூர் கரியமாணிக்க பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கந்தசாமி மகன் காளியப்பன் (37) என்பவர் காயம் அடைந்தார். மற்றொருவர் காயமின்றி உயிர் தப்பினார். ஆம்னி பஸ் மோதியதில் காரின் பக்கவாட்டில் சேதம் ஏற்பட்டது.
இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர் அந்தோணி, வருவாய் ஆய்வாளர் சிவனுப்பாண்டி, திருமலாபுரம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்த காளியப்பனை மீட்டு சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும், வழக்குப்பதிவு செய்து ஆம்னி பஸ் டிரைவரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி மகன் ஜெயபிரகாசை (32) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை- தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் வாசுதேவநல்லூர் அருகே உள்ள ஒத்தகடை பழைய விலக்கு முதல் உள்ளார் தென்புறம் வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்குள் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் வாகன விபத்தில் இறந்துள்ளனர். எனவே, சாலையின் இருபுறமும் சோலார் மின்விளக்குகளை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் தற்போது விலக்கிற்கு தென்புறம் உள்ள சிக்னல் மின்விளக்கு இரவு நேரத்தில் எரிவதே இல்லை என்றும் குற்றம் சாட்டினர். முக்கியமாக தென்காசியில் இருந்து செல்லும் சென்னை, பெங்களூரு, கோவை ஆகிய தனியார் ஆம்னி பஸ்களில் லாப நோக்கிற்காக ஒரேயொரு டிரைவரை மட்டுமே பணி அமர்த்தி வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தொலைதூர ஆம்னி பஸ்களில் 2 டிரைவர்கள் பணி அமர்த்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.