கோவையில், கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை பொருட்கள் விற்பனை - 8 பேர் கைது
கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை பொருட்கள் விற்பனை செய்த 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.;
கோவை,
கோவை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏராளமான கல்லூரிகள் உள்ளன. அங்கு படிக்கும் மாணவர்களில் பலர் கல்லூரி விடுதியில் தங்காமல், வாடகைக்கு வீடு பிடித்து தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வருகிறார்கள்.
இதுபோன்ற மாணவர்களை தேடிப்பிடித்து, முன்னாள் மாணவர்கள் மூலம் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக கோவை பகுதியில் போதை பொருட்கள் விற்பனை கும்பலின் செயல்பாடு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக எல்.எஸ்.டி. என்ற போதை மருந்து தடவிய ஸ்டாம்புகள், எம்.டி.எம்.ஏ. என்ற போதை மருந்து உள்ளிட்ட பல்வேறு வகையான போதை பொருட்கள் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது தொடர்பாக கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தி கோவையில் இதுவரை 8 பேரை கைது செய்துள்ளனர். இவர்களில் 4 பேர் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லூரி மாணவர்களின் உடல்நலம் மற்றும் மனநலத்தை பாதிக்கும் போதை பழக்கம் குறித்து கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு வின்சென்ட் கூறியதாவது:-
தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கோவாவில் இருந்து பெங்களூரு வழியாக கோவைக்கு கடத்தி வந்து விற்பனை செய்கிறார்கள். கோவை சரவணம்பட்டி, அவினாசி ரோடு, மயிலேறிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் போதை பொருட்கள் விற்பனை கும்பலை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து போதை மருந்து தடவிய 53 ஸ்டாம்புகள், 11 கிராம் எம்.டி.எம்.ஏ. என்ற போதை மருந்து ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை மாவட்டத்தில் சில பண்ணை தோட்டங்களை ஒரு நாளைக்கு ரூ.1 லட்சத்துக்கு வாடகைக்கு எடுத்து பிறந்தநாள் கொண்டாடுவதாக கூறி, போதை பொருட்களை உபயோகித்து குழு நடனமாடுகிறார்கள். இது போன்ற கும்பலுக்கு பண்ணை தோட்டங்களை வாடகைக்கு கொடுக்க கூடாது என்று தோட்ட அதிபர்களை வலியுறுத்தியுள்ளோம்.
போதை பொருட்களை உபயோகிப்பவர்கள் குறைந்தது 6 மணிநேரம் செயல் இழந்து கிடப்பார்கள். இதனால் மூளை மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டு நிரந்தர பாதிப்பு ஏற்படும். மாணவர்களை குறி வைத்து போதை பொருட்களை விற்று இந்த கும்பல் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். இதை தடுக்க நாங்களும் தீவிர சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.