மாயமான வாலிபர் குளத்தில் பிணமாக மீட்பு
ஆவடி அருகே மாயமான வாலிபர், குளத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.
ஆவடி,
ஆவடியை அடுத்த முத்தாபுதுபேட்டை மேலப்பேடு பெருமாள் கோவில் தெருவில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்தவர் கோவிந்தராஜ் (வயது 29). கூலி தொழிலாளி. இவரது சொந்த ஊர் சென்னை மடிப்பாக்கம் ஆகும்.
இவருடன் விக்னேஷ், தங்கமணி ஆகிய இருவரும் அந்த அறையில் தங்கி, ஸ்ரீபெரும் புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர்.
பிணமாக மிதந்தார்
கடந்த சனிக்கிழமை அறையில் இருந்து வெளியே சென்ற கோவிந்தராஜ், அதன்பிறகு திரும்பி வரவில்லை. அவர் வேறு எங்காவது கூலி வேலைக்கு சென்று இருக்கலாம் என விக்னேஷ், தங்கமணி இருவரும் நினைத்து விட்டனர்.
நேற்று காலை மேலப்பேடு பகுதியில் உள்ள குளத்தில் கோவிந்தராஜ் பிணமாக மிதந்தார். இதுபற்றி பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில முத்தாபுதுபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, குளத்தில் மிதந்த கோவிந்தராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தவறி விழுந்தாரா?
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், பலியான கோவிந்தராஜ் பி.எஸ்சி படித்து உள்ளார். பெற்றோர் இல்லாததால் இந்த அறையில் தங்கி, யாராவது அழைத்தால் கூலி வேலைக்கு சென்று வந்தார். மேலும் அவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
எனவே அவர் குடிபோதையில் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா?. அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.