ஜோலார்பேட்டை அருகே: வாலிபர் குத்திக்கொலை - அண்ணன், தம்பிக்கு வலைவீச்சு

ஜோலார்பேட்டை அருகே வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார். அண்ணன், தம்பியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2020-02-17 00:02 GMT
ஜோலார்பேட்டை,

பெங்களூருவை சேர்ந்த பார்த்தசாரதியின் மகன் அபி (வயது 18). இவர், தமிழகத்தில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமத்தில் உள்ள உறவினர் முகே‌‌ஷ் (19) வீட்டுக்கு வந்தார். இருவரும், நேற்று இரவு 8 மணியளவில் ஒரு மோட்டார்சைக்கிளில் அந்த பகுதி சாலையில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது.

அதே கிராமத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பியான குமார் (35), தயாளன் (30) ஆகியோர் சேர்ந்து, அவர்களை தடுத்து நிறுத்தி மோட்டார்சைக்கிளில் ஏன் வேகமாக செல்கிறீர்கள், மெதுவாக செல்ல வேண்டியது தானே? என கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த தயாளன் தன்னிடம் இருந்த கத்தியால் அபியை சரமாரியாக குத்தினார். அபியை காப்பாற்ற முயன்ற முகேசுக்கும் கத்திக்குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் இருவரும் கீழே விழுந்தனர். இதில் அபி இறந்து விட்டார். உடனே அண்ணன்-தம்பி இருவரும் தப்பியோடி தலைமறைவாகி விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முகேஷை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தப்பியோடிய அண்ணன், தம்பியை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்