பெண் மர்ம சாவில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்த வாலிபர் கைது - போலீசில் பரபரப்பு வாக்குமூலம்

குள்ளஞ்சாவடி அருகே மர்மமான முறையில் பெண் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் இது தொடர்பாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2020-02-16 23:15 GMT
குறிஞ்சிப்பாடி,

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள சமட்டிக்குப்பம் கிரு‌‌ஷ்ணம்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மனைவி சிவகாமசுந்தரி(வயது 43). இவருக்கு அஜித்குமார்(24), அருண்குமார்(22) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் பாலசுப்பிரமணியன் இறந்துவிட்டதால், சிவகாமசுந்தரி கூலி வேலைக்கு சென்று தனது பிள்ளைகளை வளர்த்து வந்தார். தற்போது அஜித்குமார் மலேசியாவிலும், அருண்குமார் கோவையிலும் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். இதனால் சிவகாமசுந்தரி வீட்டில் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி காலை தனது வீட்டின் அருகிலேயே கரும்பு தோட்டத்தில் உள்ள ஒரு பலா மரத்தின் அடியில் சிவகாமசுந்தரி மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவரது உடல் அருகில், சிறிய டார்ச் லைட், அட்டை விரிப்பு ஆகியவை கிடந்தன. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த குள்ளஞ்சாவடி போலீசார் சிவகாமசுந்தரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் சிவகாமசுந்தரியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது செல்போன் எண்ணுக்கு கடைசியாக பேசிய நபர் 34 முறை அவரை தொடர்பு கொண்டு இருக்கிறார். ஆகையால் அந்த நபரை பிடித்து விசாரித்தால் உண்மை தெரியவரும் என்று கூறி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து நேற்று முன்தினம் கடலூர் அரசு மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், சிவகாமசுந்தரியின் செல்போன் எண்ணுக்கு போன் செய்தவர் குறித்து விசாரித்தனர். அதில், வடக்குத்து தெற்கு தெருவை சேர்ந்த ராமலிங்கம் மகன் சம்பத் என்கிற ஜெகதீசன்(26) என்பது தெரியவந்தது. இவர் தற்போது புலியூர்காட்டுசாகை கிராமத்தில் வசித்து வருகிறார்.

இதையடுத்து அவரை பிடிக்க போலீசார் விரைந்தனர். ஆனால் வீட்டில் அவர் இல்லை. தொடர்ந்து அவரது செல்போன் சிக்னல் மூலம் பார்த்த போது, அருகில் உள்ள இலுப்பை தோப்பு பகுதியை காண்பித்தது. இதையடுத்து போலீசார், அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தோப்பின் உள்ளே பதுங்கி இருந்த சம்பத்தை போலீசார் மடக்கி பிடித்து, குள்ளஞ்சவாடி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரிடம் விசாரித்த போது, சிவகாமசுந்தரியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கொலைக்கான காரணம் குறித்து போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் வீடுகளுக்கு மூங்கில் வேலி அமைத்து கொடுக்கும் வேலை செய்து வந்தேன். அந்த வகையில் சிவகாமசுந்தரியின் வீட்டுக்கும் மூங்கில் வேலி அமைத்து கொடுக்க சென்றேன். அப்போது எனக்கும், அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தோம். மேலும் அவர் என்னிடம் பீர் வாங்கி வருமாறும் தெரிவிப்பார். நானும் அவரது வீட்டுக்கு வாங்கி செல்வேன். பின்னர் இருவரும் சேர்ந்து அதனை குடிப்போம்.

இந்த நிலையில் எனக்கு திருமணம் செய்து வைக்க எனது குடும்பத்தினர் முடிவு செய்து, ஒரு பெண்ணை பார்த்தனர். இதையடுத்து சிவகாமசுந்தரியுடன் உள்ள பழக்கத்தை இனி துண்டித்துக்கொள்வது என்கிற முடிவுக்கு வந்தேன். இதுபற்றி அவருக்கு போன் செய்து தெரியப்படுத்தினேன். ஆனால் அவர் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. பின்னர் அவருக்கு பலமுறை போன் செய்தும், எனது அழைப்பை எடுக்கவில்லை.

இதையடுத்து நேரில் சென்று சமாதானம் செய்ய முடிவு செய்தேன். அதன்படி நாங்கள் வழக்கமாக சந்திக்கும், அவரது வீட்டின் அருகே உள்ள பலா மரத்தடியில் கடந்த 13-ந்தேதி இரவு காத்திருந்தேன். அங்கு சிவகாமசுந்தரியும் வந்தார். நாங்கள் இருவரும் நீண்ட நேரம் பேசினோம். அப்போது எனது திருமணம் தொடர்பாக பேசிய போது, என்னை விட்டு விட்டு திருமணம் செய்து கொள்ளப் போகிறாயா? என்று சத்தம் போட்டு கேட்டார்.

இதனால் யாருக்கும் கேட்டுவிடும் என்று பயந்த நான் அவரது வாயை பொத்தினேன். சிறிது நேரத்தில் அவர் மூச்சு திணறல் ஏற்பட்டு, இறந்துவிட்டார். இதையடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த நான், அங்கிருந்து தப்பி இலுப்பை தோப்பின் உள்ளே புகுந்து தலைமறைவாக இருந்து வந்தேன். ஆனால் என்னை போலீசார் எப்படியோ கண்டு பிடித்துவிட்டனர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பத்தை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் கொலை செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்