சாத்தனூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் 4 ஏரிகள் நிரம்பியது - விவசாயிகள் மகிழ்ச்சி

சாத்தனூர் அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீரால் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் 4 ஏரிகள் நிரம்பியது.;

Update: 2020-02-16 21:35 GMT
மூங்கில்துறைப்பட்டு,

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகாவில் சாத்தனூர் அணை உள்ளது. 119 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து இடது மற்றும் வலதுபுற கால்வாய்களில் திறந்துவிடும் தண்ணீர் மூலம் திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் 12 ஆயிரத்து 543 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் மூங்கில்துறைப்பட்டு பகுதிக்குட்பட்ட 48 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும்.

இந்த நிலையில் சாத்தனூர் அணை பாசன விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் சாகுபடி செய்த பயிர்களை காப்பாற்ற அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் கடந்த 5-ந்தேதி சாத்தனூர் அணையில் இருந்து இடது மற்றும் வலது புற கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் வலது புற பிரதான கால்வாய் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு பகுதியை வந்தடைந்தது. இந்த தண்ணீர் கிளை வாய்க்கால்கள் மூலம் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் உள்ள 48 ஏரிகளுக்கும் செல்கிறது. இந்த நீர் வரத்து காரணமாக வறண்டு கிடந்த ஏரிகள் நிரம்பி வருகிறது. தற்போது மூங்கில்துறைப்பட்டு, சவேரியார்பாளையம், மைக்கேல் புரம், கோணத்தன்கொட்டாய் ஆகிய ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மற்ற ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், சாத்தனூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் தற்போது மூங்கில்துறைப்பட்டு பகுதியில் உள்ள ஏரிகளுக்கு செல்கிறது. இதில் தற்போது 4 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

மீதமுள்ள ஏரிகளும் விரைவில் நிரம்பும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக குறுவை சாகுபடி பணியின் போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இருப்பினும் ஒரு சில இடங்களில் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளதால் ஏரிகளுக்கு தண்ணீர் சீராக செல்லவில்லை. இதன் காரணமாக பல ஏரிகள் நிரம்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து புகார் அளித்த பின்பும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதை தவிர்க்க தூர்ந்துபோன வாய்க்கால்களை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்