முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் - அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருச்சியில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Update: 2020-02-16 22:15 GMT
திருச்சி, 

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடக்க நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார். அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்ட பின் போட்டியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

இதில் தடகளம், கபடி, கைப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. வீரர், வீராங்கனைகள் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டி தொடர்ந்து இன்றும் (திங்கட்கிழமை) நடக்கிறது. முன்னதாக தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரபு உள்பட அதிகாரிகள், வீரர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக தலா ரூ.1,000-ம், 2-ம் பரிசாக தலா ரூ.750-ம், மூன்றாம் பரிசாக தலா ரூ.500-ம் வழங்கப்படுகிறது. போட்டிகளில் தனிநபரில் முதல் இடம் பெற்றவர்களும், குழு போட்டியில் தேர்வு செய்யப்படுவர்களும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அரசு செலவில் அழைத்து செல்லப்படுவார்கள் என்றும், மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு முதல் பரிசு தலா ரூ.1 லட்சமும், 2-ம் பரிசு தலா ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசு தலா ரூ.50 ஆயிரமும் தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது, என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்