சார்ஜாவில் இருந்து சென்னைக்கு கத்தி கைப்பிடிக்குள் மறைத்து ஒரு கிலோ தங்கம் கடத்தல்

சார்ஜாவில் இருந்து சென்னைக்கு இறைச்சி வெட்டும் கத்தியின் கைப்பிடிக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.49 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இதுதொடர்பாக ஆந்திராவை சேர்ந்தவரை கைது செய்தனர்.

Update: 2020-02-15 23:15 GMT
ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின் பேரில் விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது சார்ஜாவில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. அதில் வந்த ஆந்திராவைச் சேர்ந்த முகமதுகான் பதான் (41) என்பவர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரை நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

கத்திக்குள் மறைத்து கடத்தல்

அதில் இறைச்சி வெட்டும் பெரிய கத்தி ஒன்று இருந்தது. சந்தேகத்தின் பேரில் அந்த கத்தியின் கைப்பிடியை பிரித்து பார்த்தனர். அதில் தங்க கட்டியை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிந்தது. அவரிடம் இருந்து ரூ.49 லட்சத்து 3 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ 164 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து ஆந்திராவைச் சேர்ந்த முகமதுகான் பதானை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவர் யாருக்காக தங்கத்தை கடத்தி வந்தார்?, இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்