ஓடுதளத்தில் ஜீப் குறுக்கிட்டதால் பரபரப்பு விமானம் மயிரிழையில் தப்பியது புனே விமான நிலையத்தில் திகில் சம்பவம்

புனே விமான நிலைய ஓடுதளத்தில் ஜீப் குறுக்கிட்டது. விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை உடனடியாக மேலே எழுப்பியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Update: 2020-02-15 23:30 GMT
புனே,

புனே விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானம் நேற்று காலை 8.05 மணி அளவில் 180 பயணிகளுடன் புறப்பட்டது. அந்த விமானம் வானில் பறப்பதற்கு ஆயத்தமாக ஓடுதளத்தில் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் ஓடுதளத்தின் குறுக்கே ஒரு மனிதர் மற்றும் ஜீப் ஒன்றை விமானி கவனித்தார்.

இதனால் பதறி போன அவர் விமானம் ஜீப்பின் மீது மோதிவிடாமல் இருப்பதற்காக அவசர, அவரசமாக செயல்பட்டு விமானத்தை மேலே எழுப்பினார். விமானியின் சாமர்த்திய செயல்பாடு காரணமாக, ஜீப்பின் மீது விமானம் மோதி ஏற்படவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விமான பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பினர். சினிமா காட்சியை மிஞ்சும் வகையில் இந்த சம்பவம் நடந்தது.

இந்த திகில் சம்பவத்துக்கு மத்தியில் விமானம் பாதுகாப்பாக டெல்லி சென்றடைந்தது. பயணிகள் அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். சம்பவத்தின் போது, விமானத்தை அவரசமாக மேலே எழுப்பியதன் காரணமாக விமானத்தின் அடிப்பகுதி சேதம் அடைந்தது.

இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. விமானத்தின் கறுப்பு பெட்டியின் ஒரு பகுதியான விமானியின் குரல் பதிவியை அகற்றி ஆய்வுக்கு உட்படுத்துமாறு ஏர் இந்தியாவுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் விசாரணைக்காக அந்த ஏர் இந்தியா விமானம் சேவையில் இருந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்தால் புனே விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் விமான பயணிகள் இடையே அச்சம் ஏற்பட்டு இருக்கிறது.

மேலும் செய்திகள்