தானேயில் வணிக வளாக கட்டிடத்தில் பயங்கர தீ 350 பேர் பத்திரமாக மீட்பு

தானே வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கிய 350 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.;

Update: 2020-02-15 22:45 GMT
தானே,

தானே காபூர்பாவ்டி பகுதியில் 4 மாடி வணிக வளாகம் உள்ளது. வணிக வளாகத்தின் முதல் மாடியில் நேற்று பகல் 1.50 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் 20 வாகனங்களுடன் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட்டனர்.

கட்டிடத்தின் உள்ளே சிக்கியிருந்த 350 பேரை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். குறிப்பாக 4-வது மாடியில் சிக்கி பரிதவித்த நாம்தேவ் (49) என்பவரை கண்ணாடியை உடைத்து மீட்டனர். மீட்பு பணியின் போது தீயணைப்பு வீரர் ஆர்.கே. செலாருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அவர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி வணிக வளாகத்தில் எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் வணிக வளாகத்தில் இருந்த கடைகள், அலுவலகங்கள் எரிந்து நாசமாகின. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீ விபத்து காரணமாக வணிக வளாகம் முன் உள்ள சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

மேலும் செய்திகள்