அரசு அலுவலர்கள் குடும்ப நலன், எதிர்கால பாதுகாப்பிற்காக காப்பீடு செய்ய வேண்டும்; மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சு

அரசு அலுவலர்கள் குடும்ப நலன், எதிர்கால பாதுகாப்பிற்காக கண்டிப்பாக விபத்து, மருத்துவ காப்பீடு செய்ய வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் கூறினார்.

Update: 2020-02-15 22:00 GMT
வேலூர்,

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அரசு அலுவலர்களுக்கான சிறப்பு நிதியியல் முகாம் வேலூர் டி.கே.எம். மகளிர் கல்லூரியில் நேற்று நடந்தது. கல்லூரி செயலாளர் மணிநாதன் முன்னிலை வகித்தார். தாசில்தார் விஜயன் வரவேற்றார்.

முகாமிற்கு வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் தலைமை தாங்கி பேசியதாவது:-

விபத்து, மருத்துவ காப்பீடு மற்றும் அவற்றின் பயன் குறித்து அரசு அலுவலர்கள் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் இன்றைய காலக்கட்டத்தில் காப்பீடு என்பது அத்தியாவசிய ஒன்றாகும்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 141 வருவாய் ஊழியர்கள் பணியின்போது விபத்து, உடல்நலக்குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர். அவர்கள் பெரும்பாலானோர் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் ஆவர்.

காவல்துறை போன்று 24 மணி நேரமும் பணிபுரியும் துறையாக வருவாய்துறை மாறி வருகிறது. எனவே அரசு அலுவலர்கள் தங்களின் நலனை கருத்தில் கொண்டு அடிப்படை காப்பீடு தவிர பிற காப்பீட்டு திட்டங்களிலும் சேர வேண்டும். எதிர்பாராத விதமாக உயிரிழக்க நேரிட்டால் குடும்பத்தினர் பரிதவிக்க வேண்டிய நிலை ஏற்படும். அதேபோன்று புதிதாக பணியில் சேர்ந்துள்ள அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. 

எனவே அரசு அலுவலர்கள் குடும்பநலன் மற்றும் எதிர்கால பாதுகாப்பிற்கு ஏற்ற விபத்து மற்றும் மருத்துவ காப்பீடு செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகள் குறைந்த விலையில் விபத்து, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு காப்பீடு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர், மத்திய, மாநில அரசுகளின் காப்பீடு திட்டங்கள் குறித்து வீடியோ காட்சி மூலம் விளக்கினார். முகாமில், பல்வேறு வங்கி, காப்பீடு நிறுவனங்கள் கலந்து கொண்டு காப்பீடு திட்டங்களில் சேருவதற்கான விண்ணப்பங்களை அரசு அலுவலர்களிடம் வழங்கினர். அதில் விருப்ப திட்டத்தை அரசு ஊழியர்கள் பூர்த்தி செய்து கொடுத்தனர்.

இதில், தாசில்தார்கள் சரவணமுத்து, ரமேஷ், ஜெகதீஸ்வரன் மற்றும் துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்