நாட்டு நடப்புகளை புரிந்து கொண்டு வருங்காலத்தில் உங்களுக்கு பாடுபடக்கூடியவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு
நாட்டு நடப்புகளை புரிந்து கொண்டு வருங்காலத்தில் உங்களுக்கு பாடுபடக்கூடியவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தூத்துக்குடி,
நாட்டு நடப்புகளை புரிந்து கொண்டு வருங்காலத்தில் உங்களுக்கு பாடுபடக்கூடியவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திருமண வரவேற்பு விழா
தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. முன்னாள் செயலாளர் என்.பெரியசாமியின் பேரனும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ.– ஜீவன்ஜேக்கப் ஆகியோரின் மகனுமான டாக்டர் மகிழ்ஜான் சந்தோஷ், சேலம் ப்ராங்க் கிருபா–பூர்ணிமா ஆகியோரின் மகள் டாக்டர் கீர்த்தனா ஆகியோர் திருமணம் கடந்த 12–ந்தேதி சேலத்தில் நடந்தது. அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை தூத்துக்குடி ஏ.வி.எம். கமலவேல் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலின், மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். தொடர்ந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
குடும்பம்
தூத்துக்குடியில் தி.மு.க.வுக்கு தூணாக விளங்கிய, தலைவர் கலைஞரின் முரட்டு பக்தனாக விளங்கிய பெரியசாமியின் பேரன் மணவிழா வரவேற்பு நிகழ்ச்சி இது. பெரியசாமி இயக்கத் தோழர்களோடு, இணைந்து, பிணைந்து அவர் செய்து உள்ள பணிகளை எல்லாம் நாம் இன்றும் நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். அதனால்தான் கலைஞர், அவரை செல்லமாக முரட்டு பக்தன் என்று அழைத்தார். அவருடைய வழிநின்று, அவரது மகள் கீதாஜீவன் இந்த மாவட்டத்தில் கழகத்தை வழிநடத்திக் கொண்டு இருக்கிறார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியை கூட கழகத்துக்கு பயன்படக்கூடிய வகையில், கழக பிரசார நிகழ்ச்சியாகவே நடத்தி உள்ளார். அப்படிப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு நான் வந்து உள்ளேன். எனது தங்கை கனிமொழி, எனது மனைவியும் வந்து உள்ளனர். இதுதான் குடும்ப பாச உணர்வு. தி.மு.க ஒரு குடும்பமாக இருக்கிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டு. நாங்கள் மட்டுமல்ல, இங்கு வந்து உள்ள நீங்களும் குடும்ப பாச உணர்வோடுதான் வந்து உள்ளீர்கள் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது.
மணமக்களுக்கு அறிவுரை, ஆலோசனைகளை கூற வேண்டிய அவசியம் இல்லை. காரணம் விஞ்ஞான உலகில் வளர்ந்து கொண்டு இருக்கிறோம். படித்தவர்கள், நாட்டு நடப்புகளை நன்றாக அறிந்து வைத்து இருப்பவர்கள். குறிப்பாக இன்றைய அரசியல் சூழ்நிலையையும் தெளிவாக தெரிந்து வைத்து இருப்பவர்கள்தான். மணமக்கள் எல்லா வளமும் பெற்று சிறப்போது வாழ்ந்து, நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.
நாட்டு நடப்பு
நாட்டில் ஏற்பட்டு உள்ள நிலைமைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாக தெரியும். அது மத்தியில் இருக்கும் ஆட்சியாக இருந்தாலும், மாநிலத்தில் நடைபெறும் ஆட்சியாக இருந்தாலும் எந்த உணர்வோடு ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். ஆகையால் நாடு முழுவதும் போராட்டம், சாலைமறியல், உண்ணாவிரதம், கண்டன கூட்டங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. நாட்டு நடப்புகளை நன்றாக புரிந்து கொண்டு, வரக்கூடிய காலகட்டங்களில் உங்களுக்கு பாடுபடக்கூடியவர்கள் யார், உங்களுக்கு பணியாற்றக்கூடியவர்கள் யார், உங்கள் பிரச்சினைகளை பற்றி சிந்திக்ககூடியவர்கள் யார் என்பதை மட்டும் சிந்தித்து பார்த்து, அதற்கு துணை நிற்ககூடிய வகையில், ஆதரவு அளிக்கும் வகையில் உங்கள் பணி, ஆதரவு, கடமை உணர்வு இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், எம்.எல்.ஏ.க்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா, ஆஸ்டின், பூங்கோதை ஆலடி அருணா, மனோதங்கராஜ், ஏ.எல்.எஸ்.லட்சுமணன், சாத்தூர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி, மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி, நெல்லை மாவட்ட செயலாளர்கள் அப்துல்வகாப்(மாநகர்), பத்மநாபன்(மேற்கு), முன்னாள் எம்.எல்.ஏ ராஜமன்னார், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் மற்றும் தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.