திருச்செந்தூரில் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழா ஏற்பாடுகளை அமைச்சர் ஆய்வு
திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழா ஏற்பாடுகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழா ஏற்பாடுகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மணிமண்டபம் திறப்பு விழா
பத்திரிகை, கல்வி, விளையாட்டு, ஆன்மிகம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் செலவில் தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டு உள்ளது.
இதன் திறப்பு விழா வருகிற 22–ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து மணிமண்டபம் அருகில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏராளமான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், நிறைவேற்றப்பட்ட பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், விழா பேரூரை நிகழ்த்துகிறார்.
விழாவை முன்னிட்டு, அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழா ஏற்பாடுகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆகியோர் நேற்று மாலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:–
முப்பெரும் விழா
பாமர மக்களும் கல்வியறிவு பெற வேண்டும். தமிழ் கற்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தமிழகத்தில் முதன் முதலில் பத்திரிகையை தொடங்கியவர் ‘தமிழர் தந்தை‘ சி.பா.ஆதித்தனார். தந்தை வழியில் தனயன் என்பதற்கு இணங்க, சி.பா.ஆதித்தனாரின் வழியில் தமிழுக்கு தொண்டாற்றியவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். அவர் ஆன்மிக செம்மலாகவும் விளங்கினார். இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராகவும் திறம்பட பணியாற்றினார். அவரை ‘சின்னய்யா‘ என்று அன்போடு அழைக்கும் தென் மாவட்ட மக்கள், அவருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதனை ஏற்று, தூத்துக்குடியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் திருச்செந்தூரில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், சிறப்பான முறையில் மணிமண்டபம் கட்டப்பட்டு உள்ளது. இதனை வருகிற 22–ந் தேதி (சனிக்கிழமை) முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு நலம் பயக்கும் விழாவாக ஏராளமான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது. மேலும் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முப்பெரும் விழாவாக நடத்தப்படுகிறது.
லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்பு
இந்த விழாவுக்கு துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்குகிறார். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தையும், முழு உருவ வெண்கல சிலையையும் திறந்து வைத்து, விழா பேரூரையாற்றுகின்றார்.
விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சமுதாய பெருமக்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்து வருகின்றோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவருடன் சண்முகநாதன் எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன், திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர் அம்ரித், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன்,
திருச்செந்தூர் யூனியன் ஆணையாளர் சந்தோஷ், யூனியன் துணை தலைவர் ரெஜிபர்டு பர்னாந்து, மண்டல துணை தாசில்தார் கோபால், தொழில் அதிபர்கள் தண்டுபத்து ஜெயராமன், சுதர்சன் வடமலைபாண்டியன், திருச்செந்தூர் காந்தி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் திருப்பதி, கூட்டுறவு சங்க தலைவர் பூந்தோட்டம் மனோகரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.