மாமல்லபுரத்தில் நுழைவு சீட்டு மையத்தில் ‘கியூ ஆர் ஸ்கேனிங்’ முறை அறிமுகம்
மாமல்லபுரத்தில் தொல்லியல் துறையின் நுழைவு சீட்டு மையத்தில் நேற்று முதல் ‘கியூ ஆர் ஸ்கேனிங்’ முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை கண்டுகளிக்க வெளிநாட்டு பயணிக்கு ரூ.600, உள்நாட்டு பயணிக்கு ரூ.40 என பார்வையாளர்களிடம் தொல்லியல் துறை கட்டணத்தை வசூலிக்கிறது.
இந்த நுழைவு சீட்டுகளை பெறுவதற்காக கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் ஆகிய புராதன சின்னங்களின் நுழைவு வாயிலில் நுழைவு சீட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது இந்த நுழைவு சீட்டு மையங்களில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி செல்போன்களில் ‘கியூ ஆர் ஸ்கேனிங்’ முறை திட்டத்தை கனரா வங்கியின் உதவியுடன் மத்திய தொல்லியல் துறை அறிமுகப்படுத்தி உள்ளது.
நேற்று கடற்கரை கோவில் நுழைவு சீட்டு மையத்தில் நடைபெற்ற விழாவில் கனரா வங்கியின் காஞ்சீபுரம் மண்டல மேலாளர் ராம்குமார், கனரா வங்கியின் காஞ்சீபுரம் உதவி பொது மேலாளர் செல்வராஜ், காஞ்சீபுரம் கிளை தலைமை மேலாளர் ஜெயேந்திரன், மாமல்லபுரம் தொல்லியல் துறை உதவி அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு ‘கியூ ஆர் ஸ்கேனிங்’ முறையை தொடங்கி வைத்து, அறிமுகப்படுத்தினர்.
நிகழ்ச்சியில் வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் பலர் கலந்து கொண்டு, செல்போன் மூலம் ‘கியூ ஆர் ஸ்கேனிங்’ முறையில் பதிவு செய்து புராதன சின்னங்களை கண்டுகளிக்க சென்றனர்.
இதுவரை சுற்றுலா பயணிகள் பணம் செலுத்தியும், டெபிட் மற்றும் கிரிடிட் கார்டு மூலம் பணம் செலுத்தி நுழைவு சீட்டு பெற்று வந்தனர். செல்போன் மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தி ‘கியூ ஆர் ஸ்கேனிங்’ முறையில் பதிவு செய்து மாமல்லபுரம் புராதன சின்னங்களை இனி கண்டுகளிக்கலாம்.