மந்திரி பதவி வழங்காததால் அதிருப்தி: எனது தகுதிக்கு, முதல்-மந்திரி பதவி கிடைக்க வேண்டும் உமேஷ்கட்டி எம்.எல்.ஏ. சொல்கிறார்

மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள உமேஷ்கட்டி எம்.எல்.ஏ., எனது தகுதிக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Update: 2020-02-10 23:41 GMT
பெங்களூரு, 

கர்நாடக மந்திரிசபை கடந்த 6-ந் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது. 10 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர். உமேஷ்கட்டி எம்.எல்.ஏ. உள்பட 3 பேருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று தகவல் வெளியானது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் களுக்கு மந்திரி பதவி வழங்கும் முடிவு கைவிடப்பட்டது. இதனால் உமேஷ்கட்டி கடும் ஏமாற்றம் அடைந்தார். மேலும் அவர் எடியூரப்பா மற்றும் பா.ஜனதா தலைவர்கள் மீது அதிருப்தியில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் இதுகுறித்து அவர் சிக்கோடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. நான் ஏற்கனவே 13 ஆண்டுகள் மந்திரியாக பணியாற்றினேன். அதனால் புதியவர்களுக்கு மந்திரி பதவி வழங்கியதில் என்ன தவறு உள்ளது?. எனக்கு மந்திரி பதவி வழங்காவிட்டாலும் எனது தொகுதியை மேம்படுத்துவேன்.

முதல்-மந்திரி பதவி

மந்திரி பதவி கிடைக்காததால் எனக்கு எந்த அதிருப்தியோ அல்லது கோபமோ இல்லை. நான் என் மனைவியிடமே கோபித்து கொள்வது இல்லை. முதல்-மந்திரி எடியூரப்பா மீது கோபித்து கொள்வேனா?. எனது தகுதிக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்க வேண்டும்.

அந்த நோக்கத்தில் நான் முயற்சி மேற்கொண்டு வருகிறேன். கடவுளின் ஆசி கிடைத்தால் ஒரு நாள் நானும் முதல்-மந்திரி ஆவேன். அரசியலில் எனக்கு அனுபவம் குறைவு. லட்சுமண் சவதிக்கு அனுபவம் அதிகமாக உள்ளது. அதனால் அவருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கியுள்ளனர்.

இவ்வாறு உமேஷ்கட்டி கூறினார்.

மேலும் செய்திகள்