மாநில தேர்தல் ஆணையர் விவகாரம்: தலைமை செயலாளர் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்தார்

மாநில தேர்தல் ஆணையர் விவகாரம் தொடர்பாக தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்தார்.

Update: 2020-02-10 23:40 GMT
புதுச்சேரி,

புதுவை மாநில தேர்தல் ஆணையர் பதவியிடத்தை நிரப்ப கடந்த ஆண்டு ஜூலை மாதம் உள்ளாட்சித்துறை அறிவிப்பு வெளியிட்டது. கவர்னர் கிரண்பெடியின் அறிவுறுத்தலின்படி இது நடந்ததாக எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சபாநாயகர் சிவக்கொழுந்து உள்ளாட்சித்துறையின் அறிவிப்பினை ரத்து செய்தார்.

இதைத்தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையர் நியமனம் அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டு மாநில தேர்தல் ஆணையராக டி.எம்.பால கிருஷ்ணன் பதவியேற்றுக்கொண்டார். இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவர்னர் கிரண்பெடி மத்திய அரசிடம் புகார் செய்தார்.

இதைத்தொடர்ந்து மத்திய அரசு மாநில தேர்தல் ஆணையரை வெளிப்படையாக தேர்வு செய்ய தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்கவேண்டும் என்றும் அவரை கவர்னரே இறுதி செய்வார் என்றும் அறிவுறுத்தியது.

இதைத்தொடர்ந்து மீண்டும் உள்ளாட்சித்துறை மாநில தேர்தல் ஆணையர் நியமனத்துக்கு அறிவிப்பு வெளியி்ட்டது. சட்டமன்ற முடிவுக்கு மாறாக இந்த அறிவிப்பு உள்ளதாக, அறிவிப்பு வெளியிட்ட உள்ளாட்சித்துறை சார்பு செயலாளர், இயக்குனர், செயலாளர், தலைமை செயலாளர் ஆகியோர் மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயமூர்த்தி உரிமை மீறல் புகார் அளித்தார்.

இந்த புகார் தொடர்பாக சார்பு செயலாளர், இயக்குனர், செயலாளர் ஆகியோர் துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன் தலைமையிலான உரிமை மீறல் குழு முன்பு ஆஜர் ஆகி விளக்கம் அளித்தனர். அதைத்தொடர்ந்து கடந்த மாதம் 27-ந்தேதி தலைமை செயலாளர் அஸ்வனிகுமாரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அப்போது அவரிடம் உரிமை மீறல் குழு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அவற்றுக்கு 5 நாட்களில் விளக்கம் அளிப்பதாக தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் தெரிவித்தார். ஆனால் 5 நாட்களில் விளக்கம் அளிக்காததால் அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்படி தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் நேற்று உரிமை மீறல் குழு முன்பு ஆஜராக வேண்டும். ஆனால் அதற்கு முன்பாகவே அவர் எழுத்துப்பூர்வமாக உரிமை மீறல் குழுவுக்கு விளக்கம் அளித்தார். இதனால் அவர் நேற்று ஆஜர் ஆகவில்லை.

இதைத்தொடர்ந்து தலைமை செயலாளரின் விளக்கம் தொடர்பாக உரிமை மீறல் குழுவின் தலைவரான துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன் தலைமையில் உறுப்பினர்களான எம்.எல்.ஏ. அனந்தராமன், பாஸ்கர், விஜயவேணி மற்றும் சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மேலும் செய்திகள்