உறவினர் தர வேண்டிய ரூ.13 லட்சத்தை வாங்கி தராததால் பேக்கரி அதிபரை அடித்துக் கொன்றோம் போலீசில் ரவுடி கும்பல் பரபரப்பு வாக்குமூலம்

உறவினரிடம் இருந்து சீட்டு தொகை ரூ.13 லட்சத்தை வாங்கி தராததால் பேக்கரி அதிபரை அடித்துக் கொன்றோம் என்று போலீசில் ரவுடி கும்பல் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Update: 2020-02-10 23:29 GMT
வில்லியனூர்,

புதுவை மாநிலம் ஏம்பலம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் வஜ்ரவேல்(வயது 51). நித்யானந்தாவின் சீடர். வில்லியனூர், ஏம்பலத்தில் பேக்கரி கடை நடத்தி வந்தார். கடந்த மாதம் 28-ந் தேதி இரவு மாயமானார். இந்த நிலையில் குருவிநத்தம் சமுதாயக்கூடம் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் தனது காரில் பிணமாக கிடந்தார்.

இது குறித்து கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வஜ்ரவேல் கொலை தொடர்பாக தேடப்பட்ட ரவுடி கும்பலான கரிக்கலாம்பாக்கம் அய்யனார், கணுவாப்பேட்டை அய்யனார், பொம்மையார்பாளையம் மாதவன், சரத்குமார், அசோக், விஜய், சரபாலன் ஆகிய 7 பேர் மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தனர். கரிக்கலாம்பாக்கம் போலீசார் மதுரை சென்று கோர்ட்டு அனுமதியுடன் காவலில் எடுத்து புதுவைக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஏம்பலம் இளவரசன், புதுக்குப்பம் ஆனந்த் ஆகிய 2 பேருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். அவர்கள் 2 பேரும் ஏம்பலம் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்று அவர்களை கைது செய்தனர்.

வஜ்ரவேலை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து போலீசாரிடம் அவர்கள் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

பேக்கரி அதிபர் வஜ்ரவேலின் உறவினர் காரணம்ேபட் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இதில் எங்கள் நண்பர் ஆனந்துக்கு ரூ.13 லட்சம் தர வேண்டியது இருந்தது. அந்த பணத்தை தராமல் பிரகாஷ் இழுத்தடித்தார்.

இதுகுறித்து அவரது உறவினரான வஜ்ரவேலிடம் ஆனந்த் தெரிவித்துள்ளார். அவரும் பஞ்சாயத்து பேசி உள்ளார். ஆனால் சொன்னபடி வஜ்ரவேல் பணத்தை பெற்றுக் கொடுக்கவில்லை.

இது குறித்து தனது உறவினர் இளையராஜாவிடம் ஆனந்த் தெரிவித்துள்ளார். அவர் அந்த பகுதியை சேர்ந்த ரவுடியான கரிக்கலாம்பாக்கம் அய்யனாரிடம் தெரிவித்தார். அய்யனார் தனது ஆட்களுடன் சென்று வஜ்ரவேலை மிரட்டினார்.

ஆனாலும் அவர் பணம் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் வஜ்ரவேலை கொலை செய்ய திட்டமிட்டோம். சம்பவத்தன்று வஜ்ரவேலின் நடமாட்டத்தை ஆனந்த் கண்காணித்து தகவல் தெரிவித்தார். அதன்படி புதுக்குப்பம் பகுதியில் காரில் வந்த வஜ்ரவேலை வழிமறித்து அதில் ஏறிக்கொண்டோம். பணத்தை கேட்டு அவரை காருக்குள் வைத்து அடித்தோம். இதில் மயங்கிய வஜ்ரவேல் இறந்து விட்டார். உடலை மறைப்பதற்காக காரை குருவிநத்தம் பகுதியில் நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டோம். பின்னர் விழுப்புரம் வழியாக மதுரைக்கு சென்று அங்கு கோர்ட்டில் சரண் அடைந்தோம். இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மேலும் செய்திகள்