பொது வழி பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயி குடும்பத்துடன் போராட்டம்

பொது வழி பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயி குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.;

Update: 2020-02-10 22:30 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்களிடம் இருந்தும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகளிடம் இருந்தும் பல்வேறு கோரிக்கை மனுக்களை கலெக்டர் நேரில் பெற்று கொண்டார்.

இதில் கல்வி உதவித்தொகை, வங்கிக்கடன் உதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.

மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் வழங்கி அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் நிலுவையிலுள்ள மனுக்களின் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

கலசபாக்கம் தாலுகா பட்டியந்தல் கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகன் மற்றும் அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள், விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு தலையில் புல்லு கட்டுகளை சுமந்தபடி வந்தனர். பின்னர் அவர்கள் பொது வழி பாதையை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று கோ‌‌ஷமிட்டு மண்டியிட்டு அழுதபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர்.

இதையடுத்து அவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில், முருகன் நிலத்தின் அருகில் சென்று இருந்த பொது வழியை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். தற்போது நிலத்தில் பயிர் அறுவடை செய்ய தயாராக உள்ளது. அரசு அதிகாரிகள் சொல்லியும் வழிவிடாமல் எங்களை பல்வேறு விதத்தில் மிரட்டி வருகிறார்கள். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி பொது வழி பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

செங்கம் தாலுகா பரமனந்தல் கிராமம் காமராஜ் நகரை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில், நாங்கள் மேற்கண்ட முகவரியில் 100 ஆண்டுகாலமாக வசித்து வருகிறோம். எங்களுடைய நிலம் மற்றும் வாழ்வாதார சான்றுதல் எதுவும் இல்லை. எங்களுடைய அப்பா, தாத்தா, பாட்டன் படிப்பறிவு இல்லாதவர்கள். அவர்கள் நில உரிமைக்கான அரசு சான்றுகள் எதுவும் பெறவில்லை. தற்போது எங்களை காலி செய்யக்கோரி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மூலம் சிலர் மிரட்டி வருகின்றனர். இதுகுறித்து விசாரித்து எங்களுக்கு நிரந்தரமாக வாழ்வாதாரம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு பழங்குடியினர் முன்னேற்ற சங்கம் சார்பில் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில், தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி வருவாய் கிராமமான மேல்பாச்சார், கீழ்பாச்சார், மோத்தக்கல், குபேரபட்டினம், மலையனூர் செக்கடி, மேட்டுபாளையம், காவேரிபட்டினம் கூட்டார் ஆகிய கிராமங்களில் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உண்டு உறைவிட பள்ளி, சுடுகாடு மயானம், வேளாண்மை சித்த பண்ணை அமைக்க மாநில நில நிர்வாக ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். இதனை அமல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்