பரதராமியில், காளை விடும் விழாவில் மாடு முட்டியதில் பம்ப் ஆபரேட்டர் பலி - 33 பேர் காயம்
பரதராமியில் காளை விடும் விழாவில் மாடு முட்டியதில் பம்ப் ஆபரேட்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
குடியாத்தம்,
குடியாத்தத்தை அடுத்த பரதராமியில் காளை விடும் விழா நடைபெற்றது. இதில் குடியாத்தம், கே.வி.குப்பம், லத்தேரி, பேரணாம்பட்டு, மாதனூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, வாணியம்பாடி, காட்பாடி மற்றும் சித்தூர், வி.கோட்டா, பங்காருபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டன.
கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்தனர். காளை ஓடும் வீதியின் இருபக்கமும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டிருந்தன. விழாவில் உதவி கலெக்டர் (பொறுப்பு) தினகரன், தாசில்தார் வத்சலா ஆகியோர் கலந்துகொண்டு காளை விடும் விழாவை தொடங்கி வைத்தனர். அதைத் தொடர்ந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை இளைஞர்கள் உற்சாகப்படுத்தினர்.
துணை தாசில்தார் தேவி, வருவாய் ஆய்வாளர் சுதா, கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், கவிதா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
விழாவில் மாடுகள் முட்டியதில் 25 பேர் லேசான காயமும், 9 பேர் படுகாயமும் அடைந்தனர். இதனையடுத்து லேசான காயம் அடைந்தவர்களுக்கு அங்கேயே அமைக்கப்பட்டு இருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. படுகாயம் அடைந்த 9 பேரை சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் வீரிசெட்டிபல்லியை சேர்ந்த பம்ப் ஆபரேட்டர் தேவேந்திரன் (வயது 55) என்பவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த தேவேந்திரனுக்கு ஆதியம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.