மதுபோதையில் நண்பர் விரட்டியதால் கிணற்றில் தவறி விழுந்து கட்டிட தொழிலாளி சாவு - பொங்கலூர் அருகே சம்பவம்

பொங்கலூர் அருகே மதுபோதையில் நண்பர் விரட்டியதால் கட்டிட தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2020-02-10 22:00 GMT
பொங்கலூர்,

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்துள்ள வீரவாஞ்சி நகரை சேர்ந்த சுப்பையாதேவரின் மகன் சமுத்திரபாண்டி(வயது42). கட்டிட மேஸ்திரியான இவர் பொங்கலூரை அடுத்துள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தில் ரவி என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஆட்களை வைத்து கட்டிட வேலை செய்து வந்தார். இந்த கட்டிட வேலையில் சமுத்திரபாண்டியின் ஊரைச்சேர்ந்த காளியப்பன் என்பவரது மகன் ஆறுமுகம்(22), அதே ஊரைச்சேர்ந்த செல்வராஜ்(55) உள்பட 6 பேர் வேலை செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கட்டிட பணி நடைபெறவில்லை. இதனால் அனைவரும் அன்று மதியம் அசைவ உணவு மற்றும் மது அருந்தியுள்ளனர். கட்டிட மேஸ்திரியான சமுத்திரபாண்டி மாலை 5 மணியளவில் கோவைக்கு செல்வதாக கூறி வெளியே சென்றுள்ளார். பின்னர் மற்றவர்கள் அனைவரும் அங்கேயே இருந்துள்ளனர்.

இந்த நிலையில் இரவு 7 மணியளவில் மதுபோதையில் இருந்த செல்வராஜ் நண்பர்களான சக தொழிலாளர்களிடம் தகராறு செய்தார். இதனால் செல்வராஜை மற்றவர்கள் ஏன் தகராறு செய்கிறாய்? என்று சத்தம்போட்டனர். இதில் ஆத்திரமடைந்த செல்வராஜ் அங்கிருந்த கடப்பாறையை எடுத்துக்கொண்டு மற்றவர்களை அடிக்க பாய்ந்தார். இதனால் பயந்துபோன சக தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.

இதில் ஆறுமுகம் என்பவர் ஓடும்போது அந்த பகுதியில் உள்ள சுமார் 80 அடி ஆழம் உள்ள கிணற்றில் தவறி விழுந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வெளியூர் சென்றிருந்த கட்டிட மேஸ்திரி சமுத்திரபாண்டி சம்பவ இடத்திற்கு வந்து தேடிபார்த்தபோது கிடைக்கவில்லை. பின்னர் நேற்று காலை இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரிவித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் ஆறுமுகம் விழுந்த கிணற்றை வந்து பார்த்தபோது கிணற்றில் சுமார் 10 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்தது. பின்னர் போலீசார் திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடியபோது ஆறுமுகத்தின் உடலை கண்டுபிடித்தனர். பின்னர் கயிறு மூலம் மேலே கொண்டு வந்தனர். தொடர்ந்து ஆறுமுகத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் இது குறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மதுபோதையால் ஏற்பட்ட தகராறில் நண்பர் துரத்தியபோது கிணற்றில் விழுந்து சக தொழிலாளி இறந்து போன சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்