ராமேசுவரத்தில் தந்தை-மகன் கழுத்தை அறுத்து கொலை? குட்டையில் பிணமாக கிடந்ததால் பரபரப்பு

ராமேசுவரத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சிறுவனும், அவனது தந்தையும் பிணமாக கிடந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2020-02-10 23:15 GMT
ராமேசுவரம்,

ராமேசுவரம் காட்டுப்பிள்ளையார்கோவில் பகுதியை சேர்ந்தவர் மலைராஜன் (வயது 50). கூலி தொழிலாளி. இவரது மனைவி மாரீசுவரி, மகன் இளையராஜா (7). இவன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். மலைராஜன் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு மலைராஜன் தனது மகனை அழைத்துக்கொண்டு ஸ்ரீராம்நகரில் உள்ள தனது அக்காள் வீட்டில் நடைபெறும் திருமணத்துக்கு செல்வதாக கூறிச்சென்றுள்ளார். ஆனால் திருமணத்துக்கு அவர்கள் வரவில்லை. தந்தையும், மகனையும் பல இடங்களில் தேடியும் அவர்களைப்பற்றி எவ்வித தகவலும் தெரியவில்லை. இந்த நிலையில் நேற்று காலை சுடுகாட்டம்பட்டி தரவை பகுதியில் தந்தையும், மகனும் கழுத்து அறுபட்ட நிலையில் குட்டையில் பிணமாக கிடப்பதாக நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 பேரின் உடலையும் பரிசோதனைக்காக ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் சந்தனமாரி வழக்குபதிவு செய்தார். மலைராஜன் தனது மகனை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது 2 பேரும் கொலை செய்யப்பட்டார்களா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இறந்த சிறுவன் இளையராஜா நன்றாக படித்துள்ளான். ஆனால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அடிக்கடி பள்ளிக்கு வராமல் இருந்துள்ளான். இதுகுறித்து கேட்டறிந்த பள்ளி ஆசிரியை அவனை சைல்டு லைன் அமைப்பு மூலம் காப்பகத்தில் தங்கி படிக்க நடவடிக்கை எடுத்ததாகவும், நேற்று அவனை காப்பகத்தில் சேர்க்க இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்