மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி பானிபூரி வியாபாரி பலி

மணலி அருகே மோட்டார் சைக்கிள் மீது மாநகர பஸ் மோதியதில், பஸ் சக்கரத்தில் சிக்கி பானிபூரி வியாபாரி பரிதாபமாக இறந்தார்.;

Update:2020-02-11 04:00 IST
திருவொற்றியூர்,

மாதவரம் எஸ்.வி. கோவில் தெருவைச் சேர்ந்தவர் பர்வீன் (வயது 31). வடமாநிலத்தைச் சேர்ந்தவரான இவர், அதே பகுதியில் பானிபூரி கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று காலை பர்வீன், மணலிபுதுநகரில் இருந்து மாதவரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். மணலி ஆண்டார்குப்பம் அருகே சென்றபோது அவருக்கு பின்னால் மீஞ்சூரில் இருந்து பெரம்பூர் நோக்கி சென்ற மாநகர பஸ்(தடம் எண் 164) அவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

பஸ் சக்கரத்தில் சிக்கி பலி

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி சாலையில் விழுந்த பர்வீன் மீது மாநகர பஸ் ஏறி இறங்கியது. பஸ் சக்கரத்தில் சிக்கிய பர்வீன், அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

சம்பவம் குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகர பஸ் டிரைவரான பெரம்பூர் ஜமாலியாவைச் சேர்ந்த அஜித்குமார்(39) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்