குளத்தில் தண்ணீர் இல்லாததால் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் நிலை தெப்ப உற்சவம்
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் நிலை தெப்பத்தில் உற்சவர் சந்திரசேகரர் உடனுறை வடிவுடையம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.;
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் மிகவும் புகழ்பெற்றது ஆகும். ஆண்டுதோறும் இந்த கோவிலில் தைப்பூசத்தையொட்டி தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம். வழக்கமாக தெப்ப உற்சவம் கோவில் வெளியே உள்ள ஆதிசேச தீர்த்த குளத்தில் நடக்கும். ஆனால் தண்ணீர் இல்லாததால் கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் நிலை தெப்ப உற்சவம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் காலை தியாகராஜ சாமிக்கு அபிஷேகம் நடந்தது.
பின்னர் மாலையில் கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் கட்டப்பட்டிருந்த நிலை தெப்பத்தில் உற்சவர் சந்திரசேகரர் உடனுறை வடிவுடையம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
தொடர்ந்து பஞ்ச வாத்தியங்கள், வேத மந்திரங்கள் முழங்க பஞ்ச தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த பக்தர்கள் 'தியாகராயா ஒற்றீஸ்வரா' என விண்ணதிர முழங்கி வழிபட்டனர். பின்னர் தெப்பத்தில் இருந்து ஒய்யார நடனமாடியபடி வெளியேறிய சந்திரசேகரர், கோவில் வெளியில் உள்ள ஆதிஷேச தீர்த்தக்குளத்தை சுற்றி வலம் வந்தார்.
நிறைவாக மாடவீதி உற்சவத்துடன் நிலை தெப்ப உற்சவம் நிறைவு பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.