சென்னையில் இருந்து கோவை சென்ற விமானத்தில் கோளாறு 182 பேர் உயிர் தப்பினர்
சென்னையில் இருந்து கோவை சென்ற விமானத்தில் திடீரென ஏற்பட்ட எந்திரக்கோளாறால் மீண்டும் சென்னையில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. இதனால் 182 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து கோவைக்கு நேற்று காலை 176 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியா்களுடன் விமானம் புறப்பட்டு சென்றது. நடுவானில் விமானம் பறந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென விமானத்தில் எந்திரக்கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டுபிடித்தார்.
உடனடியாக அவர், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். பின்னர் விமானத்தை கோவைக்கு இயக்காமல் மீண்டும் சென்னைக்கே திருப்பி கொண்டுவந்து, சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கினார்.
182 பேர் உயிர் தப்பினர்
விமானத்தில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டனர். கோளாறை சரி செய்தபின்னர் சுமார் 1½ மணிநேர தாமதத்துக்கு பிறகு விமானம் மீண்டும் கோவைக்கு புறப்பட்டு சென்றது.
விமானத்தில் கோளாறு ஏற்பட்டு இருப்பதை கண்டுபிடித்த விமானி, தகுந்த நேரத்தில் ஏற்பட்ட துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. இதனால் விமானத்தில் பயணம் செய்த 182 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிா்தப்பினா். இந்த சம்பவம் பற்றி விமான நிலைய உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.