மனைப்பட்டா கேட்டு மாற்றுத்திறனாளி வாலிபர் தீக்குளிக்க முயற்சி - கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

மனைப்பட்டா கேட்டு மாற்றுத்திறனாளி வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-02-10 22:15 GMT
கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அன்புசெல்வன் தலைமையில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் குடும்ப அட்டை, உதவித்தொகை, வங்கிக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை கொடுத்தனர்.

அப்போது குறைகேட்பு கூட்ட அரங்கின் அருகே உள்ள ஓய்வறையில் 3 சக்கர சைக்கிளில் வந்திருந்த மாற்றுத்திறனாளி வாலிபர் ஒருவர் திடீரென பாட்டிலில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை எடுத்து தலையில் ஊற்றி தீ்க்குளிக்க முயன்றார். இதைப்பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று வாலிபரிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் கடலூர் அருகே உள்ள வெள்ளப்பாக்கம் மேற்கு தெருவை சேர்ந்த தரணி(வயது 38) என்பது தெரியவந்தது. மேலும் திருமணமான இவர் மனைப்பட்டா கேட்டு கடந்த 2018-ம் ஆண்டு மனு கொடுத்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, தரணி ஏற்கனவே மனைப்பட்டா கேட்டு கொடுத்த மனுவை விசாரித்தபோது அவர் வெள்ளப்பாக்கம் அரசு விதைப்பண்ணைக்கு சொந்தமான இடத்தில் வசித்து வந்தது தெரியவந்தது. அந்த இடம் புறம்போக்கு நிலமாக இருந்தால் மனைப்பட்டா கொடுத்து இருக்க வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் வேளாண்மை துறைக்கு சொந்தமான இடம் என்பதால் அங்கே பட்டா கொடுக்க இயலாது. எனவே மனைப்பட்டா தொடர்பாக ஆதிதிராவிடர் நலத்துறையை அணுகுமாறு அவரது மனுவுக்கு பதில் மனு அனுப்பி இருந்தோம் என்றார்.

மனைப்பட்டா கேட்டு மாற்றுத்திறனாளி வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்