சரத்பவாரை கொல்ல சதி தேசியவாத காங்கிரஸ் தொண்டர் பரபரப்பு புகார்

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை கொல்ல சதி நடப்பதாக அக்கட்சி தொண்டர் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்து உள்ளார்.

Update: 2020-02-10 00:07 GMT
புனே,

மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் தொண்டர் லட்சுமிகாந்த் கபியா. இவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை கொல்ல சதி நடப்பதாக சந்தேகிப்பதாக சிவாஜிநகர் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்து உள்ளார். அந்த புகார் மனுவில், ஒரு பத்திரிகையாளர் உள்பட 2 பேரின் பெயரை அவர் குறிப்பிட்டு உள்ளார்.

அவர்கள் சரத்பவார் சுடப்பட வேண்டும். ஒரு குண்டு பயன்படுத்தப்பட வேண்டும் என யூடியூப் சேனலில் விஷமத்துடன் கருத்துகளை வெளியிட்டு இருக்கின்றனர். பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே ஆகியோரை அச்சுறுத்த பயன்படுத்தப்பட்ட அதே பாணி தான் இது.

அவர்களது பேச்சை பார்க்கும் போது முன் எப்போதாவது சரத்பவாரை கொல்வதற்கு சதி செய்யப்பட்டதா? என்ற சந்தேகமும் எழுகிறது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

லட்சுமிகாந்த் கபியாவின் புகார் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக புனே போலீஸ் கமிஷனர் கே.வெங்கடேசன் கூறுகையில், லட்சுமிகாந்த் கபியாவின் புகாரின் உண்மை தன்மையை சரிபார்த்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்தநிலையில், இதுபோன்ற அச்சுறுத்தல்களை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்குமாறு தேசியவாத காங்கிரசை சேர்ந்த மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்கை கேட்டுக்கொண்டதாகவும் லட்சுமிகாந்த் கபியா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்