மனைவியுடன் பேசிய வாலிபரை கத்தியால் குத்திய தொழிலாளி கைது
பல்லடத்தில் மனைவியுடன் பேசிய வாலிபரை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவாக இருந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பல்லடம்,
பல்லடத்தை அடுத்த மாதப்பூர் பகுதியை சேர்ந்தவர் சக்தி (வயது 41). இவர் பனியன் நிறுவன தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். பல்லடம் கொசவம்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (40), இவரும் இவரது மனைவியும் பனியன் நிறுவனத்தில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் வேலைக்கு செல்லும்போது சக்தியுடன் இந்த தம்பதிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி இரவு 8 மணியளவில் முத்துகிருஷ்ணன் வீடு அருகே சக்தி சென்றுள்ளார். அப்போது வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்த முத்துகிருஷ்ணன் மனைவியை பார்த்து சக்தி பேசினார். பின்னர் அவர்கள் இருவரும் வீட்டிற்குள் சென்று பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய முத்துகிருஷ்ணன் வீட்டினுள் சக்தி இருந்ததை பார்த்து சந்தேகமடைந்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.இதில் ஆத்திரமடைந்த முத்துகிருஷ்ணன் வீட்டில் இருந்த கத்தியைஎடுத்து சக்தியின் வயிற்றில் குத்தினார். இதில் சக்தி பலத்த காயம் அடைந்தார்.
அத்துடன் இதை தடுக்க வந்த முத்துகிருஷ்ணன் மனைவிக்கும் கைகளில் காயம் ஏற்பட்டது. இவர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில் சக்தியை கத்தியால் குத்திய முத்துகிருஷ்ணன் தலைமறைவானார். இது தொடர்பான புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த முத்துகிருஷ்ணனை தேடி வந்தனர். இந்த நிலையில் பல்லடம் வடுகபாளையம் முனியப்பன் கோவில் அருகே தலைமறைவாக இருந்த முத்துகிருஷ்ணனை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.