பாம்பன் ரோடு பாலத்தில் புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரம்
பாம்பன் ரோடு பாலத்தில் புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரோடு பாலம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இதில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை போக்குவரத்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பாலத்தில் இருபுறமும் உள்ள பெரும்பாலான விளக்குகள் பல மாதங்களாக எரியாமல் இருந்து வந்தது. இதனால் மாலை 6 மணியில் இருந்து இரவு முழுவதும் ரோடு பாலம் இருள் சூழ்ந்தே காணப்பட்டு வந்தது.
இதையடுத்து பாம்பன் ரோடு பாலத்தின் ஒரு பகுதியில் விளக்கு எரியாமல், துருப்பிடித்த நிலையில் இருந்த மின் கம்பங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு ரூ.60 லட்சத்தில் கடந்த ஆண்டு புதிதாக 68 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டன. இந்தநிலையில் பாம்பன் ரோடு பாலத்தின் மற்றொரு பகுதியிலும் ரூ.45 லட்சம் நிதியில் புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணி கடந்த 1 மாதமாக நடைபெற்று வருகிறது.
அதற்காக பெங்களூரில் இருந்து துருப்பிடிக்காத வகையிலான 60 மின் கம்பங்கள் லாரி மூலம் பாம்பன் ரோடு பாலம் கொண்டு வரப்பட்டது. பின்பு புதிய மின்கம்பங்களில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தி மின்கம்பத்தை கிரேன் மூலம் பாலத்தில் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணி இன்னும் 1 வாரத்தில் முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாம்பன் ரோடு பாலத்தின் இருபுறமும் புதிதாக மின்கம்பம் மற்றும் எல்.இ.டி.விளக்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இனியாவது ரோடு பாலத்தின் இருபுறமும் அனைத்து மின் விளக்குகளையும் முறையாக எரிய விட வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.