திருவண்ணாமலையில் பவுர்ணமியை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது
திருவண்ணாமலையில் பவுர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலும் நகரின் மையப்பகுதியில் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வார்கள்.
பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் பகல் 1.43 மணிக்கு தொடங்கி நேற்று பகல் 12.43 மணிக்கு நிறைவடைந்தது. பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும் விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
நேற்று காலையிலும் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்தனர். இதனால் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அம்மணி அம்மன் கோபுர வாசலில் கட்டண தரிசனம் மற்றும் வி.ஐ.பி. தரிசனம் செய்ய குவிந்தனர். அதனால் அங்கு நெரிசல் ஏற்பட்டது. இதனால் செய்வது அறியாமல் போலீசார் திணறினர்.