பள்ளிப்பட்டில் வடமாநிலத்தை சேர்ந்தவர் ஏரியில் பிணமாக மீட்பு

பள்ளிப்பட்டில் வடமாநிலத்தை சேர்ந்தவர் கால் கழுவுவதற்காக ஏரியில் இறங்கியபோது தவறி விழுந்து இறந்ததில் பிணமாக மிதந்தார்.

Update: 2020-02-09 22:45 GMT
பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஏரியில் ஒரு ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக பள்ளிப்பட்டு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கன்னய்யன் (பொறுப்பு) உள்ளிட்ட போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்ததில், ஏரியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்தபடி காணப்பட்டது. உடனே போலீசார் ஏரியில் இறங்கி மிதந்த நிலையில் காணப்பட்ட உடலை கைப்பற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.

அப்போது கைப்பற்றப்பட்ட உடலை மீன்கள் தின்று விட்டதால் முகம், கை, கால்கள் சிதைந்து காணப்பட்டது. இதைத்தொடர்ந்து உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர், போலீசாரின் தீவிர விசாரணையில், இறந்து கிடந்தவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த பிகைய் ருத்ராஜி என்பவரது மகன் சஞ்சைபால் (வயது 44) என்பது தெரியவந்தது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிகைய் ருத்ராஜி, அசாம் மாநிலத்தில் இருந்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்துள்ளார். அவருடன் அவரது மனைவியும், மனநலம் சரியில்லாத மகன் சஞ்சைபாலும் வந்தனர். இந்த நிலையில், சஞ்சைபால் திடீரென மாயமாகிவிட்டதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து, பஸ் ஏறிய சஞ்சைபால் பள்ளிப்பட்டு வந்து சேர்ந்துள்ளார். அங்கு கால் கழுவுவதற்காக ஏரியில் இறங்கிய போது கால் தவறி தண்ணீரில் விழுந்து மூழ்கி இறந்து போனது தெரியவந்தது.

தனது மகன் மாயமானது குறித்து தந்தை பிகைய் ருத்ராஜி வேலூர் போலீசில் ஏற்கனவே புகார் செய்து இருந்தார். இந்த நிலையில் சஞ்சைபால் இறந்தது குறித்து பிகைய் ருத்ராஜிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்