மாமல்லபுரம் கடற்கரை சாலையில் புராதன சின்னங்களை கண்டுகளிக்க சிரமப்படும் சுற்றுலா பயணிகள் பாதையை அகலப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

மாமல்லபுரம் கடற்கரை சாலையில் குறுகிய மணல் பாதையில் சுற்றுலா பயணிகள் புராதன சின்னங்களை கண்டுகளிக்க செல்லும் அவலம் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த பாதையை அகலப்படுத்தி நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-02-09 22:30 GMT
மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 7-ம் நூற்றாண்டில் பல்லவர்கள் காலத்தில் குடைந்து உருவாக்கப்பட்ட பாரம்பரிய நினைவு சின்னங்களை காண உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் அதிகமானோர் வருகை தருகின்றனர்.

கடற்கரை கோவில் வளாகத்தை மத்திய தொல்லியல் துறை நிர்வகித்து வருகிறது. ரூ.40 கட்டணம் செலுத்தி நுழைவு சீட்டு பெறுபவர்கள் கடற்கரை கோவில் வளாகத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவர்.

இந்த நிலையில் கடற்கரைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த கடற்கரை கோவிலை ஒட்டியுள்ள குறுகலான 8 அடி பாதையில் சென்று வர அவதிப்படுகின்றனர். இந்த குறுகலான நடைபாதை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்திற்கு சொந்தமானதாகும்.

இந்த நடைபாதையை ஒட்டி கைவினை பொருட்கள் கடைகள் உள்ளன. கடை நடத்தும் ஒரு சிலர் நடைபாதையை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மேலும் இந்த பாதை குறுகலாகிவிட்டது.

விடுமுறை தினம் மற்றும் விசேஷ தினங்களில் குவியும் சுற்றுலா பயணிகள் எளிதாக கடற்கரைக்கு நடந்து செல்ல முடியாமல் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கடற்கரைக்கு செல்லும் அவலம் நீடிக்கிறது.

நெரிசலை பயன்படுத்தி சமூக விரோதிகள் சிலர், கூட்டத்தில் புகுந்து பெண்களிடம் சில்மிஷ நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். அதுமட்டுமில்லாமல் நெரிசலில் முதியோர், குழந்தைகள் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு சிரமப்படுகின்றனர்.

குறிப்பாக வயதானவர்கள் இந்த குறுகிய மணல் பாதையில் சென்று வர கடும் அவதிக்குள்ளாகி வேதனைப்படுகின்றனர்.

கடலில் குளித்து ராட்சத அலையில் சிக்கும் நபர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல வரும் ஆம்புலன்ஸ் வாகனமும் இந்த குறுகிய மணல் பாதையில் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் முதலுதவி சிகிச்சை கூட அளிக்க முடியாமல் சிரமம் ஏற்படுகிறது.

ஆபத்தில் சிக்குபவர்களை மெயின் ரோட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் ஆம்புலன்சில் ஏற்ற, மணல் பாதையில் தூக்கி வரும்போதே வழியிலேயே பலர் உயிரிழக்கின்றனர்.

குறுகிய மணல் பாதை என்பதால் ஆம்புலன்ஸ் மட்டுமின்றி ஆட்டோவும் செல்ல முடியாத அவல நிலை உள்ளது. இதனால் ஆபத்து காலங்களில் கடற்கரைக்கு ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அடிக்கடி கடலில் குளித்து இதுபோல் உயிரிழப்பு சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன.

இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் கடலில் ராட்சத அலையில் சிக்கி மீட்கப்பட்டு முதலுதவி சிகிச்சை கூட அளிக்க முடியாமல் மூச்சு திணறலில் உயிர் இழந்திருக்கின்றனர்.

இதற்கிடையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பின்போது மாமல்லபுரத்தில் ஆய்வு செய்த தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் இந்த குறுகலான மணல் பாதையில் உள்ள கடைகளை அகற்றி விட்டு, சாலையை அகலப்படுத்துமாறு உத்தரவிட்டார்.

கடைக்காரர்களுக்கு மாற்று இடமும் வழங்க வருவாய்த்துறைக்கு அறிவுரை வழங்கினார். ஆனால் இரு நாட்டு தலைவர்கள் வந்து சென்ற பிறகும் அதிகாரிகள் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பல ஆண்டுகளாக நீடித்து வரும் கடற்கரை சாலை பிரச்சினைக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடற்கரைக்கு பயணிகள் சிரமம் இன்றி சென்று வர இந்த சாலையை உடனடியாக அகலப்படுத்தி சிமெண்டு சாலை அமைக்க வேண்டும்.

இங்குள்ள கடைக்காரர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று பொதுமக்களும், சுற்றுலா ஆர்வலர்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்