ஆசை வார்த்தைகள் கூறி வீட்டில் சிறை வைத்து ஆந்திர மாநில சிறுமியை கர்ப்பமாக்கிய முன்னாள் ரெயில்வே ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது

ஆசை வார்த்தைகள் கூறி ஆந்திர மாநில சிறுமியை திருவொற்றியூர் அழைத்து வந்து வீட்டில் சிறை வைத்து கர்ப்பமாக்கிய முன்னாள் ரெயில்வே ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-02-09 22:30 GMT
திருவொற்றியூர்,

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த அக்டோபர் மாதம் தனது வீட்டின் அருகே உள்ள சாய்பாபா கோவிலுக்கு பாட்டியுடன் சென்றபோது மாயமானார். அந்த சிறுமி சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து விசாகப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர்.

இந்தநிலையில் விசாகப்பட்டினத்தைச்சேர்ந்த சங்கர் ராவ் (வயது 47) என்பவர் கடந்த அக்டோபர் மாதம் 27-ந்தேதி விசாகப்பட்டினம் பஸ் நிலையத்தில் நின்றிருந்த அந்த சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி சென்னை அழைத்து வந்தார்.

தென்னக ரெயில்வேயில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்த அவர், பணிநீக்கம் செய்யப்பட்டார். தற்போது தான் வசித்து வரும் திருவொற்றியூரில் உள்ள ரெயில்வே குடியிருப்புக்கு சிறுமியை அழைத்துச்சென்றார்.

அங்குள்ள வீட்டில் சிறுமியை சிறை வைத்த சங்கர் ராவ், ஆசை வார்த்தைகள் கூறி அவரை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதனால் அந்த சிறுமி 4 மாதம் கர்ப்பமானார்.

இதற்கிடையில் தான் சிறை வைக்கப்பட்ட வீட்டில் இருந்து தப்பிய சிறுமி, 7-ந்தேதி சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து தனது பாட்டியிடம் செல்போனில் தொடர்புகொண்டு தான் சென்னையில் இருப்பதாக தெரிவித்தார்.

ரெயில் நிலையத்தில் சிறுமி மட்டும் தனியாக நிற்பதை பார்த்த ரெயில்வே போலீசார், அவரை மீட்டு பெரவள்ளூரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

ஆந்திர மாநில போலீசார் உதவியுடன் சென்னை வந்த சிறுமியின் பாட்டி, சென்டிரல் ரெயில்வே போலீசார் அளித்த தகவலின்பேரில் குழந்தைகள் காப்பகத்துக்கு சென்று சிறுமியிடம் விசாரித்தார். அப்போதுதான் அவர் வீட்டில் சிறை வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும், தற்போது 4 மாதம் கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. அதை கேட்டு சிறுமியின் பாட்டி அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ரெயில்வே போலீசார் அளித்த தகவலின்பேரில் திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயில்வே குடியிருப்பில் பதுங்கியிருந்த முன்னாள் ரெயில்வே ஊழியர் சங்கர் ராவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்