நவிமும்பையில் 21 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ தீயணைப்பு வீரர்கள் 7 பேர் படுகாயம்

நவிமும்பையில் 21 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அதிகாரிகள் உள்பட தீயணைப்பு படையினர் 7 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2020-02-08 22:30 GMT
மும்பை,

நவிமும்பை நெருல் சீவுட் செக்டர் 44-ம் பகுதியில் ‘சி ஹோம்’ என்ற 21 மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் 20-வது மாடியில் நேற்று காலை 6.30 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது.

இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 6 வாகனங்கள் மற்றும் ராட்சத ஏணி கொண்ட வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் சில வீரர்கள் அங்கு கட்டிடத்தில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே கட்டிடத்தில் தீயை அணைக்கும் பணியில் இருந்த போது, அங்கிருந்த சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில், தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த சீனியர் அதிகாரிகள் உள்பட 7 தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்தனர்.

3 பேருக்கு தீவிர சிகிச்சை

இதையடுத்து அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகி்ன்றனர்.

காயமடைந்த தீயணைப்பு அதிகாரிகளான வி.டி. கோலி (வயது50), ஜே.பி. காடே(40) மற்றும் வீரர்கள் ஜே.பி. போயே(40), ஜாவ்லே(43), ஜோஷி(43), பவார்(40) தாக்ரே(39) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதற்கிடையே குடியிருப்பு கட்டிடத்தில் பற்றி எரிந்த தீயை சுமார் 4 மணி நேரம் போராடி தீயணைப்பு படையினர் அணைத்தனர். இதன் பின்னர் கட்டிடத்தை குளிர்விக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்து குறித்து சீவுட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்