தைப்பூசத்தையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு

தைப்பூசத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2020-02-08 22:30 GMT
புதுக்கோட்டை,

தைப்பூசத்தையொட்டி புதுக்கோட்டை வெள்ளாற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் உடனுறை திருகோகர்னேஸ்வரர், திருவேங்கைவாசல் வியாக்ரபுரீஸ்வரர் உடனுறை பிரகதாம்பாள், புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி உடனுறை வேதநாயகி அம்மன், கோட்டூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர், விராச்சிலை வில்வம்வனேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் ஊர்வலமாக புதுக்கோட்டை பூசத்துறையில் உள்ள வெள்ளாற்று பாலம் கரைக்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர் சுவாமிகளுக்கு வெள்ளாற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, நமணசமுத்திரம், திருமயம், கோட்டூர், பூசத்துறை, விராச்சிலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மலையக்கோவில்

இதேபோல திருமயம் அருகே உள்ள மலையக்கோவில் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சுப்பிரமணியசுவாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவிலில் இருந்து சுவாமியை ஊர்வலமாக கோவில் அருகே உள்ள தெப்பக்குளத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையொட்டி திரளான பக்தர்கள் தங்களது குழந்தைகளை கரும்பு தொட்டில் கட்டி கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வந்து நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். இதேபோல திரளான பக்தர்கள் காவடி எடுத்துக்கொண்டு கோவிலுக்கு ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். தீர்த்தவாரி நிகழ்ச்சியை முன்னிட்டு மலையக்கோவிலுக்கு புதுக்கோட்டை, திருமயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

பொன்னமராவதி-மணமேல்குடி

பொன்னமராவதி பால முருகன் கோவில், தேனிமலை சுப்பிரமணியர் கோவில், வலையபட்டி மலையாண்டி கோவில், உலகம்பட்டி ஞானியார் மடம் முருகன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் தைப்பூசத்தையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

மணமேல்குடி அருகே உள்ள பொன்னகரத்தை சேர்ந்த இலுப்பை தோப்பு கிராமத்தில் உள்ள வாலபரமேஸ்வரி அம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெற்றது. இதையொட்டி சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் விரதம் இருந்து கோவிலுக்கு பால்குடம் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். முன்னதாக காலையில் அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் மணமேல்குடி அருகே உள்ள வடக்கு அம்மாபட்டிணம் பாலதண்டாயுதபாணி கோவில், மணமேல்குடி சிவன்கோவில் ஆகிய கோவில்களிலும் தைப் பூசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

திருவரங்குளம்-அரிமளம்

திருவரங்குளம் சிவன் கோவிலில் இருந்து சுவாமி, அம்பாள் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி வாகனத்தில் எழுந்தருள செய்து 2 சப்பரங்களில் மேளதாளத்துடன் ஊர்வலமாக திருவிடையார்பட்டி வெள்ளாற்றிற்கு கொண்டு சென்றனர். பின்னர் சுவாமி அம்பாளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அரிமளத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நகரத்தார்கள் சார்பில் சுப்பிரமணியனுக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், திரவியபொடி உள்ளிட்ட பல வகையான அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்