செம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலக்கிறதா? ஆய்வு செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
செம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலக்கிறதா என்று ஆய்வு செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னையை அடுத்த செம்பாக்கம் ஏரியை ஒட்டியுள்ள ஸ்ரீசர்வமங்கல நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘பல்லாவரம், தாம்பரம், செம்பாக்கம் ஆகிய நகராட்சி பகுதிகளில் இருந்தும், சிட்லபாக்கம் கிராம பஞ்சாயத்து பகுதியில் இருந்தும் வெளியேறும் கழிவுநீர் செம்பாக்கம் ஏரியில் கலக்கிறது. இதன் காரணமாக செம்பாக்கம் ஏரியை சுற்றி உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மாசுபட்டு வருகிறது. மேலும், இந்த ஏரிக்கு வந்து செல்லும் வெளிநாட்டு பறவைகள் வரத்து குறைந்து விட்டது. எனவே, செம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து ஏரியை பாதுகாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த தீர்ப்பாயம், ‘செம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்ய செங்கல்பட்டு கலெக்டர், பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி, சிட்லபாக்கம் பஞ்சாயத்து தனி அதிகாரி ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்படுகிறது.
இந்தக்குழு ஏரியில் கழிவுநீர் ஏன் விடப்படுகிறது? அதை எப்படி தடுப்பது? சம்பந்தப்பட்ட நகராட்சி பகுதிகளில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் தற்போதைய நிலை என்ன? ஏரியை சுற்றி ஆக்கிரமிப்புகள் உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்து 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது.