பேரிடர் மீட்பு குறித்த ஒத்திகை பயிற்சி; அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் பார்வையிட்டார்
கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மீட்பு குறித்த ஒத்திகை பயிற்சி அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் பார்வையிட்டார்
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாவட்ட தீயணைப்புத் துறை சார்பில் பேரிடர் மீட்பு குறித்த ஒத்திகை பயிற்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட தீயனைப்புத் துறை அலுவலர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட உதவி தீயணைப்புத்துறை அலுவலர் முருகன் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் அதுல்யா மிஸ்ரா கலந்து கொண்டு தீயணைப்புத் துறை மூலம் பேரிடர் மீட்பு பணிக்கு பயன்படுத்தப்படும் நவீன உபகரணங்களை பார்வையிட்டார். பின்னர் தீயணைப்புத் துறையினர் மூலம் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி நடந்தது.
பேரிடர் நிகழும்போது அந்த சம்பவத்தில் காயம் அடைந்தவரை மீட்டு வருவது, முதியவர்களை மீட்டு வருவது போன்ற வழிமுறைகளை தீயணைப்புத் துறையினர் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். மேலும் உயரமான இடங்களில் உள்ளவர்களை எவ்வாறு மீட்டு வருவதை என்பதை விளக்கும் வகையில் பொம்மை ஒன்றை கயிறு மூலம் கட்டி இறக்கினர்.
மேலும் தீ விபத்து ஏற்படும்போது அதனை தீ தடுப்பு கருவிகள் மூலம் எவ்வாறு அணைப்பது குறித்தும் செயல் விளக்க செய்து காண்பிக்கப்பட்டு, அங்கிருந்தவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வமணி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் செய்து காணப்பித்தனர். இதில் வருவாய் துறை அலுவலர்கள் உள்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.