பகவதிஅம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை நேற்று நடைபெற்றது.
கன்னியாகுமரி,
விவசாயம் செழித்து, வளம் பெருகுவதற்காக கோவில்களில் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படுகிறது. இந்த புத்தரிசி பூஜை சபரிமலை ஐயப்பன் கோவில், குமரி மாவட்டத்தில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி, கன்னியாகுமரி பகவதிஅம்மன் உள்ளிட்ட கோவில்களில் இப்பூஜைகள் நடத்தப்படுகின்றன.
கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலில் இப்பூஜையையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், நிறை புத்தரிசி பூஜை நடைபெற்றது. முன்னதாக, கோவில் நிர்வாகத்துக்குச் சொந்தமான வயல்களில்இருந்து நெற்கதிர்கள் கன்னியாகுமரி அறுவடை சாஸ்தா கோவிலுக்கு கொண்டுவரப்பட்டன. அங்கு பூஜை நடத்தப்பட்டு, நெற்கதிர்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு, அம்மன் பாதத்தில் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், கோவில் பூஜாரிகள் நெற்கதிர்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர். இவற்றை வீட்டு முன் கட்டிவைத்தால் வளம் செழிக்கும் என்பதும், நெல் மூட்டையில் வைத்திருந்து விதைத்தால் விளைச்சல் அதிகரிக்கும் என்பதும் நம்பிக்கை.
தொடர்ந்து, தீபாராதனை, அபிஷேகம், முற்பகலில் தீபாராதனை, பகலில் அன்னதானம் ஆகியவை நடைபெற்றன.
ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ம.அன்புமணி, நாகர்கோவில் தேவசம் கோவில்களின் கண்காணிப்பாளர் தங்கம், பகவதிஅம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகநயினார் ஆகியோர் செய்து இருந்தனர்.