திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடந்தது.

Update: 2020-02-08 22:30 GMT
திருச்செந்தூர், 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடந்தது. விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தைப்பூச திருவிழா 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2–ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்றான தைப்பூச திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதனை முன்னிட்டு, அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

காலையில் சுவாமி அஸ்திரதேவர், சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அஸ்திரதேவர் மீண்டும் கோவிலை வந்தடைந்தார்.

சுவாமி வீதி உலா 

பின்னர் உச்சிகால அபிஷேகம், உச்சிகால தீபாராதனை நடந்தது. மதியம் சுவாமி அலைவாயுகந்த பெருமான் தங்க சப்பரத்தில் வடக்கு ரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.

மாலையில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்து மீண்டும் கோவிலை சேர்ந்தார்.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பச்சை மற்றும் காவி நிற உடை அணிந்து, பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்தனர்.

பெரும்பாலான பக்தர்கள் ஒரு அடி நீளம் முதல் 15 அடி நீளம் வரையிலான அலகு குத்தியும், புஷ்ப காவடி, இளநீர் காவடி, சர்ப்ப காவடி உள்ளிட்ட பல்வேறு காவடி எடுத்தும், வேல் ஏந்தியும், பாத யாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். பல்வேறு ஊர்களில் இருந்தும் அலங்கரிக்கப்பட்ட லோடு ஆட்டோ, மினி லாரி உள்ளிட்ட வாகனங்களில் முருகப்பெருமானின் உருவப்படத்தை வைத்து, அவரது புகழை பாடியவாறு பாத யாத்திரையாக பக்தர்கள் வந்தனர்.

நேர்த்திக்கடன் 

அதிகாலையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனத்துக்கு வரிசையில் நின்ற பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது. சிறுவர்–சிறுமிகள் முருகப்பெருமானின் வேடம் அணிந்து கோவிலுக்கு வந்து வழிபட்டனர். சில பக்தர்கள் கோவில் கடற்கரையில் மண்ணை குவித்து வைத்து, அதில் முருகப்பெருமானின் சிலையை வைத்து, அங்கு பூஜைகளை நடத்தி, முருகப்பெருமானின் திருப்புகழை பாடி வழிபட்டனர்.

கோவில் கிரிப்பிரகாரத்தை சுற்றிலும் ஆண்கள் அங்கபிரதட்சணம் செய்தும், பெண்கள் அடிபிரதட்சணம் செய்தும் வழிபட்டனர். பெரும்பாலான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தும், முருகப்பெருமானின் உருவப்படத்துடன் கூடிய சப்பரத்தை தூக்கி வந்தும், நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் கோவில் வளாகம், கடற்கரை, மண்டபங்கள், விடுதிகளில் தங்கியிருந்து வழிபட்டனர். கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.

சிறப்பு பஸ்கள் 

திருச்செந்தூர் நகர் முழுவதும் தன்னார்வலர்கள் ஆங்காங்கே பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், குளிர்ப்பானம், அன்னதானம் போன்றவற்றை வழங்கினர். காணும் இடமெல்லாம் முருக பக்தர்களாகவே காட்சி அளித்ததால், திருச்செந்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டது. நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திருச்செந்தூர் பகத்சிங் பஸ்நிலையம், கோவில் பஸ்நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் தலைமையில், நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் அம்ரித் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்