டெல்லியில் இருந்து புனே வந்த சீன பயணிக்கு கொரோனா பாதிப்பு? ஆஸ்பத்திரியில் தனிமை வார்டில் அனுமதி

டெல்லியில் இருந்து புனே வந்த விமானத்தில் வாந்தி எடுத்த சீன பயணிக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகம் காரணமாக மாநகராட்சி ஆஸ்பத்திரியில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

Update: 2020-02-07 22:45 GMT
புனே,

சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மட்டும் 636 பேரை பலி கொண்ட கொரோனா உயிர்கொல்லி வைரஸ் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட 25 நாடுகளிலும் பரவி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மராட்டியத்தில் இந்த நோயால் யாரும் பாதிக்கப்பட்டதாக இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை.

கொரோனா வைரஸ் அறிகுறியுடன் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புபவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வகையில் மராட்டியத்தில் 3 ஆஸ்பத்திரிகளில் தனிமை முகாம் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

வாந்தி எடுத்த பயணி

இந்தநிலையில், நேற்று காலை டெல்லியில் இருந்து புனேக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று பயணிகளுடன் வந்து கொண்டிருந் தது. அந்தவிமானத்தில் சீன பயணி ஒருவரும் பயணம் செய்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, அந்த சீன பயணிக்கு திடீரென குமட்டல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் தனது இருக்கையிலேயே விமானத்தில் வாந்தி எடுத்தார்.

இதன் காரணமாக அவருக்கு கொரோனா அறிகுறி இருக்கலாம் என விமானத்தில் பரபரப்பு உண்டானது.

பரிசோதனைக்கு சென்ற ரத்த மாதிரி

விமானத்தில் இருந்த மற்ற பயணிகள் பீதிக்குள்ளானார்கள். இந்த நிலையில், அந்த விமானம் புனே வந்ததடைந்ததும் உடனடியாக அந்த பயணி கீழே இறக்கப்பட்டு தனிமை வார்டு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ள புனே மாநகராட்சியின் நாயுடு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொரோனா வைரசால் அவர் பாதிக்கப்பட்டு உள்ளாரா? என்பதை கண்டறிய டாக்டர்கள் அவரது ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனைக்காக புனேயில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனத்துக்கு அனுப்பி வைத்தனர்.

ஆஸ்பத்திரியில் சீன பயணி தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்