பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவில் தைப்பூச திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவில் தைப்பூச திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2020-02-07 21:38 GMT
அச்சன்புதூர்,

தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்திப்பெற்ற முருகன் கோவில்களில், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். விழாவையொட்டி பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் இருந்து பண்பொழி நகரீஸ்வரமுடையார் கோவிலுக்கு முருகனை அழைத்து வந்து தைப்பூச திருவிழா நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகளும், வீதிஉலாவும் நடைபெற்றது. 5-ம் திருநாளன்று சட்டத்தேர் வீதிஉலாவும், 7-ம் திருநாளில் சண்முகர் எதிர்சேவை காட்சியும் நடந்தது.

9-ந் திருநாளான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. இதில் பண்பொழி, தேன்பொத்தை, கரிசல்குடியிருப்பு, திருமலைக்கோவில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் ரதவீதிகளில் சென்று நிலைக்கு வந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு ஆங்காங்கே நீர்மோர் பந்தலும் அமைக்கப்பட்டிருந்தது. இன்று (சனிக்கிழமை) தீர்த்தவாரி நடக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) சுவாமி பிரியா விடை கொடுக்கும் வைபவம் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் அருணாசலம், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் அருணாசலம் மற்றும் அனைத்து சமுதாயத்தினர், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்