கோவில்பட்டியில் குடோனில் பதுக்கிய ஒரு டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பு

கோவில்பட்டியில் குடோனில் பதுக்கிய ஒரு டன் பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, குடோன் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Update: 2020-02-07 22:15 GMT
கோவில்பட்டி,

மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவின்பேரில், கோவில்பட்டி நகரசபை ஆணையாளர் (பொறுப்பு) என்ஜினீயர் கோவிந்தராஜ் ஆலோசனையின் பேரில், நகரசபை சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ், முருகன், வள்ளிராஜ், சுரேஷ்குமார் உள்ளிட்ட குழுவினர் நேற்று கோவில்பட்டி தெற்கு பஜார், மார்க்கெட் ரோடு, கிருஷ்ணன் கோவில் ரோடு, பூ மார்க்கெட், மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், குடோன்களில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது கோவில்பட்டி மார்க்கெட் ரோடு பகுதியில் உள்ள குடோனில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பேப்பர் டம்ளர்கள் போன்றவை மொத்தம் ஒரு டன் அளவுக்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அந்த குடோனின் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள 6 குடோன்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் 2 குடோன்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் போன்றவை பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அந்த குடோன்களின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை விற்பதோ, வைத்திருப்பதோ, பயன்படுத்துவதோ பிளாஸ்டிக் மேலாண்மை விதிகளின்படி குற்றம் ஆகும். தொடர்ந்து 3 முறை பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருப்பது கண்டறியப்பட்டால், அந்த கடையின் உரிமம் ரத்து செய்வதுடன் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்