பெங்களூரு-பீதர் இடையே நேரடி விமான சேவை எடியூரப்பா தொடங்கி வைத்தார்

பெங்களூரு-பீதர் இடையே நேரடி விமான சேவையை முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்தார்.

Update: 2020-02-07 23:00 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் கர்நாடகம்-தெலுங்கானா மாநில எல்லையில் பீதர் மாவட்டம் அமைந்துள்ளது. அங்கு விமானப்படைக்கு சொந்தமான விமான நிலையம் அமைந்திருக்கிறது. உதான் திட்டத்தின் கீழ் அந்த விமான நிலையம் ரூ.11 கோடி செலவில் புனரமைக்கப்பட்டது. இந்த செலவை மாநில அரசே ஏற்றது. புதுப்பிக்கப்பட்ட அந்த விமான நிலையத்தை மக்கள் சேவைக்கு அர்ப்பணிக்கும் விழா பீதரில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, அந்த விமான நிலையத்தை மக்களின் சேவைக்காக நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அதைத்தொடர்ந்து பீதர் விமான நிலையத்தில் இருந்து பெங்களூருவுக்கு நேரடி விமான போக்குவரத்து சேவையை முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்தார்.

தண்ணீரை பீய்ச்சி அடித்து...

முன்னதாக அவர் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் பீதருக்கு சென்றார். பீதர் விமான நிலையத்தில் எடியூரப்பா சென்ற விமானத்திற்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஐதராபாத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் இந்த சேைவயை தொடங்கியுள்ளது. அந்த விமானம் தினமும் காலை 11.40 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு பீதர் விமான நிலையத்தை பகல் 1.05 மணிக்கு சென்றடையும்.

11 மணி நேரம்

பின்னர் அந்த விமானம் 1.35 மணிக்கு பீதரில் இருந்து புறப்பட்டு 3.15 மணிக்கு பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்து சேரும். இந்த விமானம் தினமும் இயக்கப்படும். உதான் திட்டத்தில் இது 252-வது வழித்தடம் ஆகும். பீதரில் இருந்து பெங்களூருவுக்கு சாலை வழியாக வரவேண்டும் என்றால் குறைந்தது 11 மணி நேரம் ஆகும்.

இந்த நிகழ்ச்சியில் கால்நடைத்துறை மந்திரி பிரபுசவான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்