‘‘எடியூரப்பா, பலவீனமான முதல்-மந்திரி’’ சித்தராமையா கடும் விமர்சனம்

எடியூரப்பாவை போன்ற பலவீனமான முதல்- மந்திரியை நான் பார்த்தது இல்லை என்று சித்தராமையா கூறினார்.

Update: 2020-02-07 22:45 GMT
பெங்களூரு, 

85-வது அகில இந்திய கன்னட இலக்கிய மாநாடு கடந்த 5-ந் தேதி கலபுரகியில் தொடங்கி நடைபெற்று வந்தது. இதன் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் பா.ஜனதாவைச் சேர்ந்த 25 எம்.பி.க்கள் உள்ளனர். ஆனாலும் கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசிடம் இருந்து அதிக நிதியை பெற முடியவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நிவாரண உதவிகளும் செய்யவில்லை.

நண்பர்கள் கிடையாது

மார்ச் மாதம் 5-ந் தேதி முதல்-மந்திரி எடியூரப்பா பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். ஆனால் சரியான முறையில் வரி வசூலாகவில்லை. மத்திய அரசுக்கு வழங்க வேண்டிய நிதி கர்நாடகத்திற்கு கிடைக்கவில்லை. எம்.எல்.ஏ.க்களின் தொகுதி வளர்ச்சி நிதியில், ஒரு தவணை மட்டுமே வழங்கியுள்ளனர். மீதமுள்ள தொகையை இந்த அரசு வழங்கவில்லை. ஏனென்றால் மாநில அரசிடம் நிதி இல்லை.

கர்நாடகத்தில் எடியூரப்பாவை போன்ற பலவீனமான முதல்-மந்திரியை நான் பார்த்தது இல்லை. எங்கள் கட்சியை விட்டு பா.ஜனதாவுக்கு போய் மந்திரி ஆகியிருப்பவர்கள் எனது நண்பர்கள் கிடையாது. அவர்கள் உண்மையிலேயே எனக்கு நல்ல நண்பர்களாக இருந்திருந்தால் எங்கள் கட்சியை விட்டு விலகி இருக்க மாட்டார்கள்.

சாயம் வெளுத்துவிட்டது

அவர்கள் எங்கள் கட்சியில் நாடகமாடிக் கொண்டிருந்தனர். என்னிடம் நண்பர்களை போல் நடித்தனர். இப்போது அவர்களின் உண்மையான சாயம் வெளுத்துவிட்டது. அவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மந்திரிகள் ஆகியிருக்கலாம். ஆனால் அவர்கள் இப்போது கட்சி மாறியவர்களே. பா.ஜனதாவில் மந்திரி பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். அந்த அதிருப்தி எப்போது வெடிக்குமோ தெரியவில்லை. எடியூரப்பா அரசு எப்போது கவிழும் என்றும் தெரியவில்லை.

குமாரசாமி மீண்டும் முதல்-மந்திரியாக வேண்டும் என்றால் மக்களின் ஆதரவு வேண்டும் என்று சொன்னேன். யார் முதல்-மந்திரியாக வேண்டும் என்றாலும் மக்களின் ஆசி தேவை. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது காங்கிரஸ் 80 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதாக குமாரசாமி குறை கூறியுள்ளார். அவர் முதல்-மந்திரியாக இருந்தபோது அவரது கட்சியினரில் எத்தனை பேரை வெற்றி பெற வைத்தார்?.

இட ஒதுக்கீடு

கர்நாடகத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளில் 75 சதவீதம் கன்னடர்களுக்கு வழங்கும் இட ஒதுக்கீடு கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை நான் வரவேற்கிறேன். இதை முழுமையான அளவில் அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்