ராட்சத அலையில் சிக்கி நர்சு பலி திருமண நாளை கொண்டாட கடலில் கணவருக்கு மோதிரம் அணிவித்தபோது பரிதாபம்
திருமண நாளை கொண்டாட கடலில் கணவருக்கு மோதிரம் அணிவித்தபோது ராட்சத அலையில் சிக்கி நர்சு பரிதாபமாக இறந்தார்.
ஆலந்தூர்,
வேலூர் காகித பட்டறையைச் சேர்ந்தவர் விக்னேஷ்(வயது 30). இவருடைய மனைவி வினிசைலா(27). இவர், தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் நர்சாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு விக்னேஷ் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சென்னையை அடுத்த கானத்தூருக்கு வந்தார். நேற்று முன்தினம் மாலை விக்னேஷ், தனது மனைவி வினிசைலா, குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் பாலவாக்கம் கடற்கரைக்கு சென்றார்.
கணவருக்கு மோதிரம்
தங்கள் குழந்தையை உடன்வந்தவர்களிடம் கொடுத்துவிட்டு வினிசைலா-விக்னேஷ் இருவரும் கடலில் குளித்தனர். இவர்களுக்கு 2-ம் ஆண்டு திருமண நாள் என்பதால் அதை கொண்டாடும் வகையில் வினிசைலா, கடலுக்குள் வைத்து தனது கணவர் விக்னேசுக்கு மோதிரம் அணிவித்தார்.
அப்போது கடலில் எழுந்த ராட்சத அலை கணவன்-மனைவி இருவரையும் கடலுக்குள் இழுத்துச்சென்றது. இதை பார்த்ததும், கரையில் நின்று கொண்டிருந்த அவர்களது குடும்பத்தினர் கூச்சலிட்டனர்.
ராட்சத அலையில் சிக்கி பலி
சத்தம்கேட்டு ஓடிவந்த அங்கிருந்த மீனவர்கள், கடலில் இறங்கி விக்னேசை மட்டும் உயிருடன் மீட்டனர். ஆனால் வெகுநேரம் தேடியும் வினிசைலாவை மீட்க முடியவில்லை. ராட்சத அலையில் சிக்கிய அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.
நேற்று அதிகாலை கொட்டிவாக்கத்தில் வினிசைலா உடல் கரை ஒதுங்கியது. இதுபற்றி தகவல் அறிந்துவந்த நீலாங்கரை போலீசார் வினிசைலா உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.