செம்மரக்கட்டைகள் பதுக்கிய 4 பேர் கைது
செம்மரக்கட்டைகள் பதுக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.;
பள்ளிப்பட்டு,
ஆந்திர மாநிலம் நாகலாபுரம் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் இன்ஸ்பெக்டர் சீனிவாசுலு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நரேஷ், போலீஸ் ஏட்டு ராதாகிருஷ்ணன ஆகியோர் ரோந்து சென்றனர்.
சந்தேகப்படும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்களை அவர்கள் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்களிடம் இருந்த 2 மோட்டார் சைக்கிளுக்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. அதனால் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
அப்போது கிருஷ்ணாபுரம் ஏரி அருகே அவர்கள் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்து இருப்பதாக தெரிவித்தனர்.
கைது
அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 175 கிலோ எடையுள்ள 37 செம்மரக்கட்டைகளை போலீசார் கைப்பற்றினர்.
விசாரணையில் அவர்கள் மாதவரத்தை சேர்ந்த விக்னேஷ் ( வயது 20), பிரவீன்குமார் (20), ஆவடியை சேர்ந்த மணிகண்டன் (19), சோழவரத்தை சேர்ந்த சக்திவேல் (27) என்பது தெரியவந்தது. அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.