விவசாயி வெற்றி பெறுவான் என்ற நிலையை உருவாக்க வேண்டும் - உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து பேச்சு

விவசாயி நினைத்தால் வெற்றி பெறுவான் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று பொங்கலூரில் நடைபெற்ற கோரிக்கை மாநாட்டில் உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து பேசினார்.

Update: 2020-02-07 05:37 GMT
பொங்கலூர்,

திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் கண்டியம்மன்கோவில் மண்டபத்தில் உழவர் உழைப்பாளர் கட்சியின் சார்பில் ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை உடனே நிறைவேற்ற கோரிக்கை மாநாடு மற்றும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு 97-வது பிறந்த நாள் விழா ஆகியன நடைபெற்றது. விழாவுக்கு பொங்கலூர் ஒன்றிய தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார்.

ஒன்றிய பொருளாளர் சுப்பிரமணியம், இளைஞரணி தலைவர் சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொங்கலூர் வட்டார செயலாளர் சுங்கம் பி.நடராஜன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநிலத்தலைவர் செல்லமுத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- நாராணயசாமி நாயுடு இருந்தபோது பொங்கலூர் வட்டாரம் விவசாயிகளுக்கான போராட்டத்தில் முதலிடத்தில் இருந்தது. அவருக்கு மிகவும் பிடித்த வட்டாரமும் பொங்கலூர் தான். தற்போது சேவைக்கும், தியாகத்திற்கும் எந்த மரியாதையும் கிடையாது என்பது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் தெரிந்தது.

இதற்கே இப்படி என்றால் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலுக்கு எவ்வளவு பணம் வேண்டும். ஆனால் பச்சை துண்டுக்காரன் பணம் இல்லாமல் வெற்றி பெற்றான் என்ற சரித்திரம் படைக்க வேண்டும். விவசாயி நினைத்தால் வெற்றி பெறுவான் என்ற நிலையை உருவாக்க வேண்டும். இந்தியாவிலேயே உழவர்களுக்கென ஒரு கட்டிடம் உழவாலயம் என்ற பெயரில் காரணம்பேட்டையில் உருவாகி வருகிறது. இந்த உழவாலயம் திறப்பு விழாவிற்கு பிறகு அந்த முயற்சியை எடுக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

மாநாட்டில், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும், உயர் மின் அழுத்த மின்கோபுரம் அமைக்க நிலம் கையகப்படுத்தும்போது அதிக இழப்பீடு வழங்க வேண்டும், எரிவாயு குழாய்களை சாலையோரங்களில் அமைக்க வேண்டும், அனுமதி இல்லாமல் செயல்படும் கரித்தொட்டி ஆலைகளை தடை செய்ய வேண்டும்.

தென்னையை தாக்கும் வெள்ளை ஈயை அரசே கட்டுப்படுத்த வேண்டும், மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும், எருமைமாட்டுப் பாலுக்கு ரூ.70-ம், பசுமாட்டுப்பாலுக்கு ரூ.50-ம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும், வேலம்பட்டியில் குட்டையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும், விவசாய கடன்கள் அனைத்தையும் மத்திய-மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும், கோழிப்பண்ணை மற்றும் விசைத்தறிக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த மாநாட்டில் மாநிலப்பொருளாளர் பாலசுப்பிரமணியம், மகளிரணி தலைவி ராஜரீகா, ஒன்றிய சேர்மன் குமார், தி.மு.க ஒன்றிய செயலாளர் அசோகன், ஊராட்சித்தலைவர்கள் கோபால்,ரவி கனகராஜ், முன்னாள் ஊராட்சித்தலைவர் பார்த்தசாரதி, பிரசார குழுத்தலைவர் மகாலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்